கடந்த 80 ஆண்டுகளை போன்றல்லாது, 2022-இல் சிறுவர் நலன்சார் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும் என UNICEF தெரிவித்துள்ளது.
இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலான நெருக்கடியை தவிர்ப்பதற்கு பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறும் இடங்கள் மற்றும் அது குறித்து பெற்றுக்கொள்ளக்கூடிய சேவை தொடர்பிலான தரவுகள் முறையாக இருக்க வேண்டுமென UNICEF குறிப்பிட்டுள்ளது.
இந்த பொறிமுறை சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலான பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கான திட்டமிடலையும் விரிவாக்கங்களையும் மேம்படுத்துவதற்கு உதவியாக அமையும் என கூறப்பட்டுள்ளது.
புதிய சட்டத்தில் சிறுவர்களுக்கான பாதுகாப்பும் வலுபடுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ள UNICEF, குடும்பங்களை வலுவூட்டுவது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளது.
இதனூடாக குழந்தைகளை தடுத்து வைத்தல், வேலைக்கமர்த்தலை முற்றாக நிறுத்த முடியுமெனவும் அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
உறுதியான சமூக சேவை, நீதிக்கான சமூகப் பணி ஆகியவை சிறுவர்களை இலங்கையில் பாதுகாப்பதற்கான சிறந்த பொறிமுறை என UNICEF தெரிவித்துள்ளது
சிறுவர் அடிமைத்தனத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்காக சமூக சேவை, நீதிக்கான பணியாளர்களின் அபிவிருத்தி, திட்டமிடலுக்கு அரசாங்கம் முன்னுரிமையளிக்க வேண்டுமெனவும் UNICEF சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த பணிகளுக்கான பயிற்சி, மேற்பார்வைக்காக அரசாங்கத்தின் முதலீடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அமைச்சுகள், திணைக்களங்கள், பொலிஸ், நீதித்துறை ஆகியன பெண்கள் – சிறுவர்கள் தமது தேவைகளை நிறைவேற்றுவதற்கான பொறிமுறையை ஸ்தாபிப்பதன் அவசியம் தொடர்பிலும் UNICEF வலியுறுத்தியுள்ளது.