சீனாவில் கனடாவை சேர்ந்த பிரபல றப் (Rapp) பாடகருக்கு பாலியல் வன்புணர்வு வழக்கில் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிரிஸ் வூ என்கிற 32 வயதான றப் பாடகர் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
தலைநகர் பீஜிங்கில் உள்ள சாயோயாங் மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வந்தது. நேற்று (25.11.22) இந்த வழக்கு இறுதி விசாரணைக்கு வந்தபோது, கிரிஸ் வூ மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக தெரிவித்த நீதிபதி அவரை குற்றவாளியாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் கிரிஸ் வூக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த விவகாரம் குறித்து கனடா உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இதேவேளை கனடா மற்றும் சீனா இடையிலான உறவு சமீபகாலமாக மோசமடைந்து வருகிறது. பல்வேறு விவகாரங்களில் இருநாடுகளுக்கு இடையே மோதல் நீடிக்கிறது. இதன் காரணமாக சீனாவில் கனடா நாட்டை சேர்ந்தவர்களும், கனடாவில் சீனர்களும் குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்படுவது தொடர் கதையாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.