168
இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய சாலை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது. பொலிஸ் அதிகாரிகளின் வாக்குறுதிக்கு அமைய தாம் போராட்டத்தினை கைவிட்டு, சேவைகளை ஆரம்பித்துள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் கடந்த புதன்கிழமை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் மாணவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். குறித்த விபத்து சம்பவத்தின் போது , இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சாரதி மீது அங்கிருந்த சிலர் தாக்குதலை மேற்கொண்டு இருந்தனர். அதில் காயமடைந்த சாரதி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாரதி மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏனைய தாக்குதலாளிகளையும்காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் எனவும் , தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கோரி நேற்றைய தினம் திங்கட்கிழமை, யாழ்ப்பாண சாலை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் போது, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தினுள் பேருந்துகளை நுழைய விடாது தடுப்புக்களை போட்டுள் ளனர். அதனால் வெளி மாவட்ட பேருந்துகள், பேருந்து நிலையத்தினுள் நுழைய முடியாததால் , வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில் யாழ்ப்பாண சாலை பணியாளர்களுக்கு ஆதரவு வழங்கும் முகமாக வடமாகாணத்தில் உள்ள ஏழு சாலைகளும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பணிப்புறக்கணி ப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் தொழிற்சங்கங்களுடன் காவல்துறை உயர் அதிகாரிகள் பேச்சு நடாத்தி தாக்குதலாளிகளை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்போம் என உறுதி வழங்கியதை அடுத்து மதியம் 2 மணி முதல் தமது போராட்டத்தை கைவிடுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
Spread the love