இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் இந்து மதத்தின் தனித்துவத்தை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் நேற்று (29.11.22) வலியுறுத்தி உள்ளார்.
´இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் இந்து மதத்தின் தனித்துவத்தை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும். இந்துக்கள் மட்டுமன்றி பௌத்த விகாரைகளிலும் இந்துமதத்தின் பல தெய்வங்களை வழிபடுகின்றார்கள்.
உதாரணமாக யாழ்ப்பாணத்தில் சிவ வழிபாடு பொதுவானது. தெற்கில் விஸ்ணு கடவுளை வழிபடுகின்றனர். ஏராளமான இந்து தெய்வங்களை தெற்கில் வழிபடுகின்றனர். விஸ்ணு, கந்தன், பத்தினி உள்ளிட்ட பல தெய்வங்களை வழிபடுகின்றனர்.
இந்தியாவில் உள்ள இந்து மதத்தைவிட இலங்கையில் உள்ள இந்து மதத்தின் தனித்துவம் குறித்து ஒரு அறிக்கையை தொகுக்குமாறு அமைச்சரைக் கேட்டுக்கொள்வதாகவும், ஏனைய கட்சிகள் இதற்கு உதவ முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வட இந்தியாவிற்கும், தென் இந்தியாவிற்கும் உள்ள வித்தியாசத்தையும் நீங்கள் காணலாம். இது இலங்கை செய்ய வேண்டிய ஒன்று. அதேபோல், இலங்கை வரலாற்று ஆய்வு நிறுவனமொன்றை ஸ்தாபிக்க வேண்டும். இலங்கையர் வரலாற்றை மறந்துவிடுகிறார்கள். எனவே, வரலாறு குறித்த அறிவையும், ஆராய்ச்சியையும் முன்னெடுப்பதற்காக இந்த நிறுவனம் செயற்பட வேண்டும்.
மகா வம்சத்துடன் தாம்அறிந்த வரலாற்றில் பெரிய வித்தியாசம் இருக்கிறது. மகா வம்சத்தில் உள்ள திகதிகளை மாற்ற முடியாது. மகா வம்சத்திலும் ஒரு தரப்பினரின் கருத்துக்களே இருக்கின்றன. வெளியே வேறு கருத்துக்களும் இருக்கின்றன. இவற்றை கருத்திற்கொண்டு இலங்கை வரலாற்று ஆய்வு நிறுவனமொன்றை ஏற்படுத்த வேண்டும்.´