178
யாழ்ப்பாணத்தில் கரப்பான் பூச்சி வடையை விற்பனை செய்த உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் ஒருவர் வாங்கிய வடையில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்ட நபர், இது தொடர்பில் யாழ் நகர பொது சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு செய்தார்.
குறித்த உணவகத்திற்கு சென்ற பொது சுகாதார பரிசோதகர்கள் கடையினை பரிசோதனை செய்து நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார். அதனை தொடர்ந்து திங்கட்கிழமை குறித்த உணவகத்திற்கு மாநகர சுகாதார வைத்திய அதிகாரியுடன் பொது சுகாதார பரிசோதகர்கள் சென்று பரிசோதனை மேற்கொண்டிருந்தனர். அதன் போது உணவகம் மற்றும் அதன் சமையல் கூடத்தில் பல சுகாதார குறைபாடுகள் இனங்காணப்பட்டது.
அதனை அடுத்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் யாழ் நகர பொது சுகாதார பரிசோதகரினால் குறித்த உணவகத்தின் உரிமையாளரிற்கு எதிராகவும், சமையற்கூட உரிமையாளரிற்கு எதிராகவும் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து இரு வழக்குகளையும் விசாரித்த நீதவான் குறித்த உணவகத்தையும், சமையற்கூடத்தினையும் மறு அறிவித்தல் வரை சீல் வைத்து மூடுமாறு உத்தரவிட்டதுடன், இரு சந்தேக நபர்களையும் தலா ஒரு இலட்சம் ஆட் பிணையில் செல்ல அனுமதித்த மேலதிக நீதவான் வழக்கினை எதிர்வரும் ஜனவரி மாதம் 25ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
Spread the love