194
யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 24 இந்திய மீனவர்களுக்கும் ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதித்து, அதனை ஐந்து வருட காலங்களுக்கு ஊர்காவற்துறை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதி இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் நெடுந்தீவுக் கடற்பரப்பில் குறித்த 24 பேரும் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்ததுடன்,அவர்களி ன் ஐந்து படகுகளையும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மறுநாள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதனை அடுத்து அவர்களை இன்றைய தினம் திங்கட்கிழமை வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் செ.கஜநிதிபாலன் முன்னிலையில் எடுத்துக்கொண்ட போது , மீனவர்களுக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதித்து , அதனை ஐந்து வருட காலத்திற்கு ஒத்திவைத்தார்.
அதேவேளை , மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஐந்து படகுகளையும் அடையாளம் காட்டி உரிமை கோருவது தொடர்பிலான வழக்கு விசாரணைகளை எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன் , அன்றைய தினம் படகு உரிமையாளர்களை மன்றில் முன்னிலையாகுமாறு பணித்தார்.
Spread the love