ஈரானில் அண்மைய அரசு எதிர்ப்புப் போராட்டங்களுடன் தொடர்புடைய இரண்டாவது மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளதாகவும் 23 வயது இளைஞா் ஒருவரை பொது வெளியில் வைத்து பகிரங்கமாக தூக்கிலிட்டதாகவும் ஈரான் நாடு தொிவித்துள்ளது.
மாஜித்ரேசா ரஹ்னாவார்ட் எனும் 23 வயதான இளைஞர். மாஷாத் நகரில் வைத்து நேற்று திங்கட் கிழமை அதிகாலை தூக்கிலிடப்பட்டதாக தொிவிக்கப்பட்டுள்ளது .
துணை ராணுவப் படைகளில் ஒன்றான பாசிஜ் எதிர்ப்புப் படையை (Basij Resistance Force ) சேர்ந்த இருவரை குத்திக் கொன்றதாகத் தொிவித்துள்ள நீதிமன்றம் அதனை “கடவுளுக்கு எதிரான குற்றம்” எனத் தொிவித்து அவருக்கெதிராகத் தீர்ப்பளித்திருந்த கைது செய்யப்பட்ட 23 நாட்களின் பின்னா் அவா் தூக்கிலிடப்பட்டுள்ளார்.
எந்தவிதமான சட்ட நடைமுறைகளும் இல்லாமல் போலியான விசாரணைக்குப் பின்னா் எதிர்ப்பாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன.
அவர் உயிரிழக்கும் வரை அவருடைய தாயிடம் மரண தண்டனை குறித்துக் கூறப்படவில்லை எனவும் பின்னர் அவரது குடும்பத்திற்கு ஒரு கல்லறையின் பெயரும் ஒரு நிலத்தின் எண்ணும் வழங்கப்பட்டதனையடுத்து அவர்கள் அங்கு சென்றபோது, பாதுகாவலர்கள் அவரது உடலை அடக்கம் செய்துகொண்டிருந்தனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 13ஆம் திகதியன்று 22 வயது பெண் மாசா அமினி, “முறையற்ற வகையில்” ஹிஜாப் அணிந்ததாகக் கூறி அறநெறி காவல்துறையினரால் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்ததைத் தொடர்ந்து, ஈரானின் மதகுரு ஸ்தாபனத்திற்கு எதிரான பெண்கள் தலைமையிலான போராட்டங்கள் ஆரம்பித்திருந்தன.
இந்தப் போராட்டம் காரணமாக , குறைந்தது 488 எதிர்ப்பாளர்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளதுடன் 18,259 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மனித உரிமை ஆர்வலர்களின் செய்தி நிறுவனம் (HRANA) தெரிவித்துள்ளது. மேலும், 62 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.