இலங்கையில் கஞ்சாவை சட்ட ரீதியாக்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடக்கம் பல தரப்பினரும் பல்வேறு நுட்ப முறைகளை கையாண்டு வருகின்றனர் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய சிரேஸ்ட நிகழ்ச்சி திட்ட அதிதாரி எ.சி.றகீம் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்தார்.
ஏதாவதொரு போதைப்பொருளை விளம்பரப்படுத்துகின்ற போது, குறிப்பிட்ட போதைப்பொருள் மாத்திரமின்றி அனைத்து வகையான போதைப்பொருட்களும் மேலோங்கும்.
மேலும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டுக் கொண்டிருப்பதனால் நாட்டினுள் சிகரட் பாவனையில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எனவே குறிப்பிட்ட உற்பத்தி நிறுவனத்திற்கு தங்களுடைய உற்பத்தி பொருள் பாவனையை இளைஞர்கள் மத்தியில் பிரபல்யப்படுத்துவதற்கு ஏனைய போதைப்பொருட்களின் மீது அவதானத்தை செலுத்த முற்படுவதும் இதிலொன்றாகக் கூட இருக்கலாம்.
சமூகத்திலுள்ள கருத்தியலாளர்கள், ஊடகவியலாளர்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள் என அனைத்து கட்டமைப்புக்களையும் இணைத்து சமூக ஆர்வலர்கள் செயற்பட வேண்டும் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல்நிலையம் வடபகுதி இணைப்பாளர் ஆ.கோடீஸ்வரன் தெரிவித்ததுடன் இவ் விடயங்களை நடைமுறைப்படுத்துவது எங்கள் அனைவரினதும் பொறுப்பாகும் என்றார்.
அதேவேளை , போதைப்பொருள் விளம்பரங்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக விளம்பரப்படுத்தப்படுகின்றது என தெரிவித்த மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல்நிலையம் நிகழ்ச்சிதிட்ட அதிகாரி நிதர்சனா செல்லத்துரை குறிப்பாக மாணவர்கள் இணையவழி கற்றலை ஆரம்பித்ததன் பின் இணையவழி ஊடாக போதைப்பொருள் விளம்பரப்படுத்தப்படுகின்றது என்றார்.
கடந்த 8 மாதங்களில் வெளிவந்த 14 திரைப்படங்களில் 13திரைப்படங்கள் போதைப்பொருள் தொடர்பான விளம்பரமாக காணப்படுகின்றது. போதைப்பொருளை ஊக்குவிப்பது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் 900 படங்கள் பகிரப்பட்டுள்ளது. இது மதுசார புகையிலை சட்டத்தை மீறும் விடயம் என்றார்.