யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வீடொன்றினை உடைத்து நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்களை பருத்தித்துறை காவற்துறையினர் கைது செய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து, 14 பவுண் நகைகளையும் மீட்டுள்ளனர்.
புலோலி சாரையடி பகுதியில், உள்ள வீடொன்றில் வசித்தவர்கள் கடந்த 7ஆம் திகதி வைத்தியசாலை சென்று இருந்த வேளையில், வீட்டின் கதவினை உடைத்தது உள்நுழைந்த கொள்ளையர்கள், வீட்டினுள் இருந்த நகைகள் மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்று இருந்தனர்.
அது தொடர்பில் பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை அடுத்த காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், பருத்தித்துறை பொலிஸாருக்கு நேற்றைய தினம் புதன்கிழமை கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களை கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர்களிடம் இருந்து தாலிக்கொடி, மோதிரம் உள்ளிட்ட 14 பவுண் நகைகளை மீட்டுள்ளதாகவும், காவல் நிலையத்தில் தடுத்து வைத்து தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.