அமெரிக்காவில் கடந்த ஆண்டு இடம்பெற்ற கப்பிற்றல் கலவரம் (Capitol riot) தொடர்பான காங்கிரசின் விசாரணையில், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது மூன்று கிரிமினல் குற்றச்சாட்டுகள் பரிந்துரைக்கப்படும் என கூறப்படுகிறது.
முன்னெப்போதும் இல்லாத வகையில், பிரதிநிதிகள் சபையின் தெரிவுக்குழு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக கிளர்ச்சி குற்றச்சாட்டை முன்வைக்கும் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த குழு தனது இறுதி அறிக்கையை அடுத்த வாரம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதியாக ஜோ பைடன் ஜனாதிபதி தேர்தலில் வெறற்றிபெற்றதற்கான சான்றிதழை நிறுத்தும் முயற்சியில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் 2021 ஜனவரி 6ஆம் திகதி அமெரிக்க காங்கிரஸ் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.
பாரிய அளவில் ஏற்பட்ட இந்த அமைதியின்மையின் பின்னணியில் டிரம்பின் பங்கு இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தக் குற்றச்சாட்டுகளை ஏற்கனவே விசாரித்து வரும் நீதித்துறை – காங்கிரஸ் குழுவின் எந்தவொரு பரிந்துரைகளையும் பரிசீலிக்க வேண்டிய கட்டாயம் இல்லை எனக் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை அமெரிக்க வரலாற்றில் ஒரு கறை படிந்த அத்தியாயம் என வர்ணிக்கப்படும் ஜனவரி 6 தாக்குதல்கள் குறித்த டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகளை அவரது செய்தித்தொடர்பாளர்; ஸ்டீவன் சியுங் மறுத்துள்ளார்.
டிரம்ப் மீதான விசாரனை தேர்வுக் குழு அதன் இறுதிக் கூட்டத்தை எதிர்வரும் திங்கள்கிழமை நடத்த திட்டமிட்டுள்ளது. இதன் போது, ஜனவரி 6ல் இடம்பெற்ற கிளர்ச்சியுடன் தொடர்’புபட்டமை, அமெரிக்க காங்கிரசின் உத்தியோகபூர்வ நடவடிக்கையைத் தடுத்தமை, அமெரிக்காவை ஏமாற்ற சதி செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் டிரம்ப் மீது, விசாரணைக்’ குழு பரிந்துரைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1,000க்கும் மேற்பட்ட சாட்சியாளர்களிடம் பெற்றப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் இறுதி எட்டு அத்தியாய அறிக்கையை, விசாரணைக் குழுவின் ஒன்பது உறுப்பினர்கள் அங்கீகரித்து, நீதித்துறைக்கு சமர்ப்பிப்பார்கள் என குறிப்படப்பட்டுள்ளது.
அந்த வகையில் டிரம் மீதான விசாரணைக் குழுவின் முழு அறிக்கையும் எதிர்வரும் புதன்கிழமை பகிரங்கப்படுத்தப்படும் என தெரிவுக்குழுவிற்கு தலைமை தாங்கும் மிசிசிப்பி ஜனநாயகக் கட்சியின் தலைவர் பென்னி தாம்சன் அறிவித்துள்ளார்.