யாழ்.கடற்பிராந்தியத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட போது நேற்று (21.12.22) மாலை கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரையும் கடற்றொழில் திணைக்களத்தினரிடம் இன்று(22.12.22) ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள இந்திய மீனவர்களை இன்று (22.12.22) காலை தாம் பொறுப்பேற்கவுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விசாரணைகளின் பின்னர் இந்திய மீனவர்களை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்.வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் நேற்று (21.12.22) முற்பகல் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது குறித்த 12 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர், கப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் SEA OF SRI LANKA எனப்படும் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 264 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், 36 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர், கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.