மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் படி இனி யாழ்.மாநகர முதல்வர் தெரிவை மேற்கொள்ள முடியாது என வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்தார்.
யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் மூலம் யாழ் மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் யாழ் மாநகர சபையின் அடுத்த கட்டம் தொடர்பாக கேள்வியெழுப்பியபோது இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் படி இனி மேயர் தெரிவை மேற்கொள்ள முடியாது. சபையை கலைப்பது தொடர்பாக நான் தீர்மானிக்க முடியாது. அது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படும். கிழக்கு மாகாணத்திலும் இவ்வாறான நிலைமை காணப்படுகின்றது.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ள நிலையில் இன்னமும் அங்கும் பதில் கிடைக்கவில்லை’ என்றார்.
யாழ்.மாநகர சபை முதல்வராக இமானுவேல் ஆர்னோல்ட் இருந்த வேளை சபையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டே புதிய முதல்வராக சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவாகி இருந்தார்.
இந்நிலையில் முதல்வர் மணிவண்ணன் முன் வைத்த வரவு செலவு திட்டம் சபையில் தோற்கடிக்கப்பட்ட நிலையில் அதனை திருத்தங்களுடன் மறுபடியும் சபையில் சமர்ப்பிக்க இருந்த நிலையில் அரசியல் ரீதியாக மீண்டும் அந்த வரவு செலவு திட்டத்தை தோற்கடிக்க கட்சிகள் தீர்மானித்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் , சபையில் திருத்தங்களுடன் வரவு செலவு திட்டத்தை மீள சமர்ப்பிக்காது தனது பதவியை தற்போதைய முதல்வர் ராஜினமா செய்துள்ளார்.