வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்காக போராட்டத்தை தெரிவு செய்ததாகவும் அதற்காக எந்தவித தியாகத்தையும் செய்வதற்கு மாணவர் இயக்கம் தயாராக உள்ளதாகவும், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே பொதுமக்களுக்கு பகிரங்க கடிதமொன்றை இன்று அனுப்பியுள்ளார்.
உண்மையான பயங்கரவாதிகள் சுதந்திரமாக உள்ளபோது, பயங்கரவாதியாக முத்திரை குத்தப்பட்ட தான், சிறையில் இருந்த 135 ஆவது நாளே இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி என சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறந்த சமூகத்திற்காக போராடி, மாற்றத்திற்காக கோரிக்கை விடுத்தவர்களும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தன்னுடன் சிறையிலுள்ளதாகவும், வசந்த முதலிகேவின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் போராட்டத்தின் எதிர்பார்ப்புகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள வசந்த முதலிகே ‘ரணில் ராஜபக்ஸ’ அரசாங்கம் தனது பணிகளை வழமை போன்று முன்னெடுத்துள்ளதாக கூறியுள்ளார்.