2019 ஏப்ரல் 21ஆம் திகதி உயிா்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த தாக்குதல்கள் தொடர்பில் போதியளவு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இதனால் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகவும் தொிவித்து, உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று (12) வழங்கப்பட்ட போதே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சிசிர மெண்டிஸ் மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கே இவ்வாறு இழப்பீடு வழங்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபாயும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 50 மில்லியன் ரூபாயும், முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் 75 மில்லியன் ரூபாயும், தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சிசிர மெண்டிஸ் 10 மில்லியன் ரூபாயும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடாக செலுத்த வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களில், 269 பேர் கொல்லப்பட்டதுடன், 500 இற்கும் மேற்பட்டோா் காயமடைந்திருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது