டெல்லி மற்றும் வடமாநிலங்களில் அடுத்தடுத்து பல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட தக் தக் காங் (‘Thak-Thak’ gang) கூண்டோடு சிக்கியிருக்கிறது. டெல்லியை கலக்கிய தக் தக் காங்கில் சிக்கியவர்களில் நால்வர் இலங்கை தமிழர்கள் என காவற்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் பல்வேறு கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக டெல்லி காவற்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொள்ளைகளில் தக் தக் காங் (‘Thak-Thak’ gang) என்ற கும்பல் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தக் தக் காங்கை (‘Thak-Thak’ gang) குறிவைத்து டெல்லி காவற்துறை களமிறங்கி தேடுதல் நடத்தியது.
டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் நூதன முறைகளில் கொள்ளையடிப்பதை தக் தக் காங் (‘Thak-Thak’ gang) வாடிக்கையாக வைத்திருந்தது. குறிப்பாக கார்களின் கண்ணாடிகளை லாவகமாக திறப்பதில் இந்த கும்பல் கில்லாடியாக இருந்துள்ளது. டெல்லியில் பதுங்கி இருந்த இந்த கும்பலை லூதியான காவற்துறை சுற்றி வளைத்து கைது செய்தது.
இந்த 4 பேரும் தமிழ் மொழியில் பேசியிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து அவர்களிடம் காவற்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் 4 பேரும் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு அகதிகளாக தஞ்சமடைந்தவர்கள் என தெரியவந்தது.
மேலும் இவர்களில் முருகன் என்பவரிடம் இருந்து மட்டும் 46 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை காவற்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டெல்லி காவற்துறை அதிகாரிகள் கூறுகையில், தக் தக் (‘Thak-Thak’ gang) என்ற பெயரிலான இந்த குழு, சிறிய கொள்ளை சம்பவங்களில்தான் ஈடுபடுவதாக நினைத்ததாகவும், ஆனால் மிகப் பெரிய கொள்ளைகளிலும் இந்த கும்பல் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தக் தக் காங்கை (‘Thak-Thak’ gang) சேர்ந்த இந்த 4 பேரும் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி காவற்துறையிடம் இருந்து தப்பி வந்துள்ளனர். செல்போன்கள் மூலம் காவற்துறையை பல நேரங்களில் திசைமாற்றி இருக்கின்றனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த கும்பலுடன் தொடர்புடைய மேலும் சிலரையும் காவற்துறையினர் தேடி வருகின்றனர்.