விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 68-வது பிறந்த நாளை ஒட்டி கல்லூரி மாணவ – மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிக்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த போட்டியில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசக் கூடாது என நிபந்தனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 68-வது பிறந்த நாளை ஒட்டி, சென்னை சின்மயா நகரில் உள்ள கல்லூரி மாணவ – மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நடத்த ஏற்பாடு செய்யபட்டிருந்தது.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி இதற்கு அனுமதி அளித்த கோயம்பேடு காவற்துறையினர், பேச்சுப்போட்டியில் தடை செய்யப்பட்ட இயக்கத்தையோ, அதன் தலைவர்களையோ புகழ்ந்து பேச கூடாது காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே நிகழ்ச்சி நடைபெற வேண்டும் நிகழ்ச்சி முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்தனர்.
இந்த நிபந்தனைகளை எதிர்த்து தமிழீழ ஆதரவு கலைஞர்கள், – இளைஞர்கள், தொழிலாளர்கள் அமைப்பின் சார்பில் புகழேந்தி தங்கராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசேகரன், பயங்கரவாத இயக்கம் குறித்து பேசுவது குற்றமல்ல என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, பிரபாகரனின் பிறந்தநாளை ஒட்டி நடத்தப்படும் பேச்சுப்போட்டியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ, அதன் தலைவரையோ புகழ்ந்து பேசக் கூடாது என்ற நிபந்தனை முறையற்றது எனக் கூறி, அந்த நிபந்தனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், பேச்சுப்போட்டியின் போது, இந்திய இறையாண்மைக்கு எதிராகவோ, அண்டை நாடுகளின் இறையாண்மைக்கு விரோதமாகவோ பேசக் கூடாது எனவும் உத்தரவிட்ட நீதிபதி, காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே போட்டிகளை நடத்த வேண்டும் என்ற நிபந்தனையையும், நிகழ்ச்சியை வீடியோ பதிவு செய்து பொலிசாருக்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.