அக்கரைப்பற்று நீதிமன்ற தீ வைப்பு சம்பவத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு காவற்துறையினருக்கு எந்த நேரத்திலும் ஒத்துழைக்க தயாராகவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான இனிய பாரதி என்றழைக்கப்படும் குமாரசாமி புஸ்பகுமார் தெரிவித்துள்ளார்.
அம்பாறை ஊடக அமையத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர்,
அக்கரைப்பற்று நீதிமன்றத்திற்கு தீ வைக்க வேண்டிய தேவை தனக்கில்லை. நீதிமன்ற களஞ்சியத்திற்கு தீ வைக்கின்ற அளவிற்கு தான் சின்ன ஆளும் அல்ல. நாட்டின் சட்டம் என்ன சொல்கின்றதோ நீதிமன்றத்திற்கு எதிரான செயற்பாட்டில் ஈடுபட்டால் சட்டம் என்ன கூறுகின்றது என்பதை தான் தெளிவாக அறிந்துள்ளதாக கூறியுள்ளார்.
2004 ஆண்டு தாம் கண்ட கண்டவர்களின் கதைகளை கேட்டு செயற்பட்டகாலங்கள் போல் தற்போது செயற்பட தாம் தயார் இல்லை. எனெனில் தாங்கள் முதிர்ச்சியடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அரசியல் மற்றும் சட்ட நீதியாகவும் தமக்கு அனுபவம் உள்ளது. எனவே இவ்வாறான சம்பவத்துடன் பொய்யான பிரச்சாரங்களுடன் தன்னை தொடர்பு படுத்த வேண்டாம். உண்மை நிலையை அறிய வேண்டியவர்கள் தம்மை தொடர்பு கொண்டு மக்களுக்கு தெளிவு படுத்த முன்வர வேண்டும்.
அத்துடன் இச்சம்பவம் இடம்பெற்ற பின்னர் தான்தலைமறைவாகியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அது உண்மைக்கு புறம்பானது என்பதுடன் இச்சம்பவம் தொடர்பில் காவற்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளதாகவும் இனிய பாரதி தெரிவித்துள்ளார்.