யாழ்ப்பாணம் கள்ள உறுதி முடித்து, இடம்பெற்ற காணி மோசடி வழக்கில் தொடர்புடையவரிடம் கையூட்டு பெற முயன்ற குற்றச்சாட்டில், யாழ்ப்பாண காவற்துறை சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவின் காவற்துறை உத்தியோகத்தர் ஒருவர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளினால் யாழ்ப்பாண புறநகர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போலி உறுதி முடித்து காணி மோசடிகள் இடம்பெற்றன. அது தொடர்பில் யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்பு காவற்துறை பிரிவினர் முன்னெடுத்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய பலரைக் காப்பாற்றுவதற்கு காவற்துறையினர் முற்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து நீதிமன்றின் உத்தரவினால் சட்டத்தரணி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
குறித்த சம்பவத்தினை விசாரணை செய்யும் பிரிவில் இடம்பெற்றுள்ள காவற்துறை உத்தியோகத்தர் ஒருவர் வழக்குடன் தொடர்புடைய தரப்பிடம் பல லட்சம் ரூபாய் பணத்தை கையூட்டாகப் பெற முயன்ற குற்றச்சாட்டில் லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.
குறித்த காவற்துறை உத்தியோகத்தர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார் .