209
காரின் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தி, தாக்குதல் மேற்கொண்ட பின்னர் காருடன் சேர்த்து அவர்களை தீயிட்டு கொளுத்தி படுகொலை செய்வதே தாக்குதலாளிகளின் நோக்கம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் , சுன்னாகம் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சன நடமாட்டம் அதிகமான நேரம் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த காரினை துரத்தி வந்து, பட்டா வாகனத்தால் மோதி விபத்தினை ஏற்படுத்தி , காரில் பயணித்தவர்கள் மீது பட்டா வாகனத்தில் வந்தவர்கள் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டர்.தாக்குதல் சம்பவத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், தாக்குதலாளிகளில் 10 பேரை அடையாளம் கண்டு இருந்தனர். அவர்களில் பிரதான சந்தேகநபர்களான ஜெகன், முத்து மற்றும் ரஞ்சித் ஆகிய மூவர் வவுனியாவில் பதுங்கி உள்ளதாக காவல்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழில் இயங்கும் வன்முறை கும்பல்களில் இரு குழுக்களுக்கு இடையிலான முரண்பாடுகளினாலையே தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாகவும், நீண்ட கால திட்டமிடப்பட்டு , சன நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் மக்கள் மத்தியில் வைத்து தாக்குதல் மேற்கொள்வது என திட்டமிடப்பட்டதாகவும், சம்பவ தினத்தன்று, காரில் பயணிக்கிறார்கள் என தகவல் அறிந்து, காரினை மோதி விபத்தினை ஏற்படுத்தி, வாள் வெட்டு தாக்குதல் நடத்திய பின்னர் காருடன் சேர்த்து அவர்களை கொளுத்த தாக்குதலாளிகள் முயன்றுள்ளனர் என தமது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Spread the love