அரச நிறுவனங்களில் பதவி உயர்வு மற்றும் சம்பள அதிகரிப்பு என்பன நிறுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த வருடத்தில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிர்வாக சபையினால ஒன்பது அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு 3 கோடி ரூபாய்க்கும் மேல் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக விமான நிறுவன தொழிற்சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தையும் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சையும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிர்வாக சபை தவறாக வழிநடத்தியுள்ளதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பதவி உயர்வு வழங்கப்பட்ட போதும் 9 அதிகாரிகளுக்கும் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை என்று ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகாரிகள் அமைச்சுக்கு அறிவித்துள்ள போதிலும், அவர்களுக்கு மாதாந்தம் ஏறக்குறைய 30 இலட்சம் ரூபாய் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த 9 அதிகாரிகளின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்காமல் பதவி உயர்வுகள் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை அதிகரித்துள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிர்வாக சபை, அரசாங்கத்தின் சட்டவிதிகளை மீறியுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
பதவி உயர்வுகள் மற்றும் கொடுப்பனவு அதிகரிப்புகள் குறித்து விசாரணை நடத்தி நிர்வாக சபை செய்த தவறை சரி செய்யுமாறு துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் தொழிற்சங்கம் முன்னர் கோரிக்கை விடுத்திருந்தபோதும் விசாரணை நடத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது
எனவே, துரித கதியில் விசாரணை நடத்தி நிர்வாக சபையின் நடவடிக்கை சரிசெய்யப்பட வேண்டும் என்று தொழிற்சங்கத்தினால் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.