இந்தியாவின் 74வது குடியரசுத் தினத்தையொட்டி டெல்லி கர்தவ்ய(கடமை) பாதையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ தேசிய கொடியை ஏற்றினார்.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தினத்தையொட்டி வெளிநாட்டு தலைவர் ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்றனர்.
முன்னதாக, சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளான ஜனவரி 23-ஆம் தேதி ஒரு வார கால கொண்டாட்டங்கள் தொடங்கியது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், ஜனவரி 23, 24 ஆகிய திகதிகளில் டெல்லியில் நடன விழாவான ‘ஆதி ஷௌர்யா – பர்வ பராக்ரம்’ ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வுகள் தியாகிகள் தினமான ஜனவரி 30 அன்று முடிவடையும்.
காலை 10 மணியளவில் போர் தியாகிகள் நினைவுச் சின்னத்திற்கு வருகைபுரிந்த பிரதமர் நரேந்திர மோதி, மறைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதை தொடர்ந்து குடியரசுத் தின நிகழ்ச்சி நடைபெறும் கர்தவ்ய பாதைக்கு அவர் வந்தார். காலை 10.30 மணியளவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார்.
இதைத் தொடர்ந்து 21 துப்பாக்கி குண்டுகள் முழக்கத்துடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. நான்கு Mi-17 1V/V5 ரக ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்பட்டன. இதை தொடர்ந்து முப்படை வீரர்களின் மரியாதை அணிவகுப்பை குடியரசுத் தலைவர் ஏற்றுகொண்டார். பிரமோஸ் ஏவுகணை, ஆகாஷ் ஏவுகணை போன்றவையும் அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தன.
இதன்பின்னர் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு தொடங்கியது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 17 அலங்கார ஊர்திகள் மற்றும் பல்வேறு துறைகளின் 6 அலங்கார ஊர்திகள் என மொத்தம் 23 அலங்கார ஊர்திகள் இந்த அணிவகுப்பில் பங்கேற்கின்றன. தமிழ் நாடு சார்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்தி தமிழ்நாட்டின் பெண்கள் முன்னேற்றம் மற்றும் கலாச்சாரம் என்னும் கருப்பொருளை கொண்டுள்ளது.
வந்தே பாரதம் நிகழ்ச்சி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 479 கலைஞர்களின் கலாச்சார நடன நிகழ்ச்சியும் இடம்பெற்றுள்ளது. இந்த ஆண்டு குடியரசுத் தின அணிவகுப்பில் இந்தியாவின் முப்படை வீரர்களுடன், எகிப்து ராணுவத்தைச் சேர்ந்த 180 பேர் கொண்ட ராணுவக் குழுவும் பங்கேற்கவுள்ளது. 60,000 முதல் 65,000 மக்கள் வரை இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும், பாதுகாப்பிற்காக டெல்லியில் 6 ஆயிரம் பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்றூம் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாக பிடிஐ ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
குடியரசுத் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோதி தனது ட்விட்டர் பக்கத்தில், “குடியரசு தின வாழ்த்துகள். சுதந்திர தினத்தின் அமிர்த மஹோத்சவின் போது நாம் கொண்டாடுவதால் இம்முறை குடியரசுத் தின விழா சிறப்பு வாய்ந்தது. நாட்டின் மகத்தான சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க நாம் ஒற்றுமையாக முன்னேற விரும்புகிறோம். சக இந்தியர்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!” என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், பல்வேறு நாட்டு தலைவர்களும் இந்திய குடியரசுத் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நன்றி – பி.பி.சி