மக்கள் வங்கியின் திருநெல்வேலி சேவை நிலையத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகளை அங்கு பணியாற்றிய அதிகாரி ஒருவர் கையாடல் செய்தமையால், தமது நகைகளை மீட்க முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மிக விரைவில் உரிய தீர்வு பெற்றுத் தரப்படும் என மக்கள் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் ரி.எம்.டபிள்யூ. சூரியகுமார தெரிவித்துள்ளார்.
மக்கள் வங்கியின் திருநெல்வேலி சேவை நிலையத்தில் அடகு வைக்கப்பட்ட ஒரு தொகுதி நகைகளை அங்கு பணியாற்றிய அதிகாரி ஒருவர் கையாடல் சென்ற காரணத்தினால், கடந்த 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அடகு வைக்கப்பட்ட தமது நகைகளை மீட்க முடியாத வாடிக்கையாளர்களுக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கன்னாதிட்டியில் அமைந்துள்ள பிராந்தியத் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதன் போது கலந்து கொண்ட வாடிக்கையாளர்கள் சார்பில், சம்பவம் இடம்பெற்று இத்தனை வருடங்களாக மக்கள் வங்கி அதிகாரிகள் பாராமுகமாகச் செயற்பட்டதுடன், வாடிக்கையாளர்கள் மீது காட்டமாக நடந்து கொண்ட சம்பவங்கள் குறித்தும் தமது கண்டனத்தையும் வெளிப்படுத்தினர். அத்துடன் ஒவ்வொருவரும் தத்தமது பிரச்சினைகளை வெளிப்படுத்தினர். கடந்த காலத்தில் இடம்பெற்ற அத்தனை சம்பவங்களுக்கும் வருத்தம் தெரிவித்த வங்கி அதிகாரிகள், தாங்கள் வாடிக்கையாளர்களுக்காகத் தம்மால் இயன்ற நடவடிக்கைகளை எடுப்போம் என்று உறுதியளித்துடன், அடகு நகை மோசடியினால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 65 வாடிக்கையாளர்களுக்கும் அவர்களது நகைகளை விரைவில் மீளளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிப்பாட்டை எழுத்து மூலம் தருவதாகவும் உறுதியளித்தனர்.
இருந்தபோதிலும், வழமை போல காலங் கடத்தப்படாமல், எதிர்வரும் 6 ஆம் திகதி வழக்கு விசாரணைகளின் முன்னேற்றம் பற்றியும், வாடிக்கையாளர்களுக்கான அடுத்த கட்ட நடவடிக்கை பற்றியும் எதிர்வரும் 10 ஆம் திகதி வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கேட்டனர். வங்கி அதிகாரிகள் அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டனர்.
இந்த அடகு நகை மோசடி 2012 இல் இடம்பெற்ற போதிலும், இது வரை காலமும் அதிகாரிகள் வாடிக்கையாளர்களுடன் இத்தகைய சந்திப்பு எதனையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.