Home இந்தியா ஹிண்டன்பர்க் அறிக்கை விளைவு: அதானி குழும பங்குகள் மூன்றாவது நாளாக சரிவு!

ஹிண்டன்பர்க் அறிக்கை விளைவு: அதானி குழும பங்குகள் மூன்றாவது நாளாக சரிவு!

by admin

அதானி vs ஹிண்டன்பர்க்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை எதிரொலியாக பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் மூன்றாவது நாளாக கடும் சரிவை எதிர்கொண்டுள்ளன. 

கௌதம் அதானி குழுமம் தனது மதிப்பை செயற்கையாக உயர்த்திக் காட்டியது, பங்குச்சந்தைகளில் திருகு வேலைகளை செய்தது என்று ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை முன்வைத்த குற்றச்சாட்டுகளின் விளைவுகளை இன்றும் பங்குச்சந்தைகளில் காண முடிந்தது.

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையால் அதானி குழுமத்தின் மீது எழுந்துள்ள சந்தேக மேகங்கள் இன்னும் விலகாததால் முதலீட்டாளர்கள் அதன் பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்த வண்ணம் உள்ளனர். இதனால், பங்குச்சந்தைகளில் அதானி குழும பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சிப் பாதையில் இருக்கின்றன.

அதானி குழுமத்தில் 5 நிறுவன பங்குகளின் மதிப்பு சரிவு

கடந்த புதன்கிழமையன்று அந்த ஆய்வறிக்கை வெளியான பிறகு, பங்குச்சந்தையில் மூன்றாவது நாளாக இன்றும் அதானி குழுமத்தில் மொத்தமுள்ள 7 நிறுவனங்களில் 5 நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டுள்ளன.

வாரத்தின் முதல் வேலை நாளான இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே, அதிகபட்சமாக அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் பங்குகளின் மதிப்பு ஒரு கட்டத்தில் 20 சதவீதம் சரிந்து, ரூ. 2,347 ஆக இருந்தது.

அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் பங்குகள் 18.66 சதவீதமும், அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் பங்குகள் 16.11 சதவீதமும், அதானி பவர், அதானி வில்மர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் தலா 5 சதவீதமும் சரிவை கண்டன.

அதானி vs ஹிண்டன்பர்க்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் பங்குகள் ஏறுமுகம்

அதானி குழுமத்திற்குட்பட்ட 7 நிறுவனங்களில் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் அன்ட் ஸ்பெஷல் எகானமிக் ஜோன் லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே ஏறுமுகமாக இருந்தன.

அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் பங்குகள் 6.15 சதவீதம் ஏற்றம் கண்டு 2,931.95 ரூபாயாக இருந்தது. அதானி போர்ட்ஸ் அன்ட் ஸ்பெஷல் எகானமிக் ஜோன் லிமிடெட் பங்கு மதிப்பு 3.58 சதவீதம் உயர்ந்து 620 ரூபாயானது.

ஏ.சி.சி., அம்புஜா பங்குகள் ஏற்றம் – என்.டி.டி.வி. பங்கு சரிவு

அதானி குழுமம் தவிர, கௌதம் அதானிக்குச் சொந்தமான மற்ற நிறுவனங்களான ஏ.சி.சி. லிமிடெட், அம்புஜா சிமெண்ட்ஸ் லிமிடெட் ஆகிய இரண்டின் பங்குகளும் சிறிய அளவில் ஏற்றம் கண்டன.

அண்மையில் அதானி வாங்கிய என்.டி.டி.வி. லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு குறைந்துள்ளது.

அதானி எண்டர்பிரைசஸ் கூடுதல் பங்கு வெளியீடு நிலவரம்

அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவைச் சந்தித்தாலும் கூட, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் வெளியிட்ட கூடுதல் பங்குகளின் விலை குறைக்கப்படவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமையன்று திட்டமிட்டபடி, ரூ.20,000 கோடி மூலதனம் திரட்டும் பொருட்டு கூடுதல் பங்கு வெளியீட்டில் இறங்கிய அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு அந்த நாள் எதிர்பார்த்தபடி அமையவில்லை. சுமார் ஒரு சதவீத பங்குகள் மட்டுமே சப்ஸ்கிரைப் ஆயின.

பங்குச்சந்தையில் வீழ்ச்சிப் பாதையில் இருந்த அதானி குழுமத்தில் முதலீடு செய்ய தயக்கம் நிலவியதால், இன்றைய தினம் அதானி எண்டர்பிரைசஸ் வெளியிட்ட கூடுதல் பங்கின் விலை 10 சதவீதம் வரை குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஒருவேளை கூடுதல் பங்கு வெளியீட்டில் இருந்து கூட அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் பின்வாங்கக் கூடும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கணித்திருந்தனர்.

ஆனால், கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கிய அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் கூடுதல் பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே விட்டுள்ளது. அதானி குழுமத்தின் மற்ற நிறுவனங்கள் சரிவைச் சந்தித்தாலும், அதானி எண்டர்பிரைசஸ் பங்குகளின் மதிப்பு உயர்வு கண்டது.

அதானி vs ஹிண்டன்பர்க்

பட மூலாதாரம்,GETTY IMAGES

“இந்தியா மீதான தாக்குதல் இது” என அதானி குழுமம் சாடல்

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையால் அதானி குழுமம் இதுவரை எதிர்கொண்டிராத நெருக்கடியில் சிக்கியுள்ளது. பங்குச்சந்தை நிலவரம் சாதகமாக இல்லாத சூழலில், “ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ள பொய்யான கூற்றுகள் இந்தியா மீதான  தாக்குதல்” என்று அதானி குழுமம் சாடியுள்ளது.

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கைக்கு பதிலளித்து 413 பக்கள் கொண்ட விளக்க அறிக்கையை அதானி குழுமம் வெளியிட்டுள்ளது.

உள்நாட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே செயல்படுவதாகவும், ஒழுங்கு விதிகள்படி தேவையானவற்றை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

“இந்திய சட்டங்கள் மற்றும் கணக்கியல் தரநிலைகளின் கீழ் ‘தொடர்புடைய தரப்புகள்’ எனத் தகுதிபெறும் நிறுவனங்களுடன் நாங்கள் மேற்கொண்ட அனைத்து பரிவர்த்தனைகளும் எங்களால் முறையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன,” என்று தனது அறிக்கையில் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

அடிப்படையில் “ஷார்ட் செல்லராகவும்” செயல்படும் ஹிண்டன்பர்க் நிறுவனம் பங்கு விற்பனையில் ஆதாயம் ஈட்டும்  நோக்கில் ஆதாரங்களை குறிப்பிடாமல் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதாக  அதானி குழுமம் விமர்சித்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், “இதில் ஆதாயம் பெறும் நோக்கமே நிறைந்துள்ளது. ஷார்ட் செல்லர் என்று ஒப்புக் கொண்டுள்ள ஹிண்டன்பர்க் நிறுவனம், நிதிச் சந்தையில் பொய்யான தோற்றத்தை உருவாக்கி எண்ணற்ற முதலீட்டாளர்களை நஷ்டப்படுத்தி அதன் மூலம் பெரும் ஆதாயத்தை அடைவதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது-

ஹிண்டன்பர்க் கடும் எதிர்வினை

அதானி குழுமத்தின் விளக்க அறிக்கைக்கு உடனடியாக ஹிண்டன்பர்க் நிறுவனம் பதில் கொடுத்துள்ளது. நாங்கள் வெளியிட்ட விரிவான அறிக்கையில் எழுப்பியிருந்த 88  கேள்விகளில் 62 கேள்விகளுக்கு அதானி குழுமம் பதிலளிக்கவில்லை என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

“இந்தியா துடிப்பாக ஜனநாயக நாடாகவும், பிரகாசமான எதிர்காலம் கொண்ட வல்லரசாக வளரும் நாடாகவும் திகழ்கிறது என்று நாங்கள் நம்புகிறோம்.  அதானி குழுமத்தால் இந்தியாவின் எதிர்காலம் பின்னுக்குத் தள்ளப்படுவதாக நம்புகிறோம்.

இந்தியாவை திட்டமிட்டுக் கொள்ளையடிக்கையில் அந்நிறுவனம் தன் மீது தேசக்க் கொடியை போர்த்திக் கொண்டுள்ளது,” என்று ஹிண்டன்பர்க் நிறுவனம் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது.

அதானி vs ஹிண்டன்பர்க்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதானி குழுமத்தை கலங்கடிக்கும் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை

அதானி குழுமம் குறித்து 106 பக்கங்கள், 32,000 சொற்கள், 720க்கும் மேற்பட்ட எடுத்துக்காட்டுகளைக் கொண்ட ஹிண்டன்பர்க்கின் ஆய்வறிக்கை கடந்த வாரம் வெளியானது. அதானி குழுமம் “கார்ப்பரேட் வரலாற்றிலேயே நடந்திராத மிகப்பெரிய மோசடியை செய்துள்ளது” என்று குற்றம் சாட்டி, 88 கேள்விகளை முன்வைத்துள்ளது ஹிண்டன்பர்க்.

மிகக் குறிப்பாக, மொரிஷியஸ், கரீபியன் தீவுகள் போன்ற வரி ஏய்ப்புக்கு உகந்த இடங்களில் இருந்து அதானி குழுமத்தில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளது ஹிண்டன்பர்க் அறிக்கை.

அதானி நிறுவனங்களுக்கு “கணிசமான கடன்” இருப்பதாகவும் இது முழு குழுமத்தையும் ஆபத்தான நிதி நிலையில் வைத்திருப்பதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை எதிரொலியாக, பங்குச்சந்தையில் அதானி குழுமம் கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டு வருகிறது. இரண்டே நாட்களில் அதானி குழுமத்தின் மதிப்பு ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமாக குறைந்துவிட்டது. அதன் விளைவாக, கௌதம் அதானியின் சொத்து மதிப்பும் குறைந்து போனதால், உலக பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்த அவர் ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

Thanks – BBC

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More