அதிகார பகிர்விற்கு ஆதரவை வெளிப்படுத்தினாலும், 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது குறித்து, இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எவ்வித நிலைப்பாட்டையும் இதுவரை எடுக்கவில்லை.
இனப்பிரச்சினை தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தை நிராகரித்த ஐக்கிய மக்கள் சக்தி, அதிகாரப் பகிர்வு தொடர்பான அரசாங்கத்தின் முன்மொழிவுகளை முன்வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, நாடாளுமன்ற பெரும்பான்மையை வைத்து ஜனாதிபதியை தன் பக்கம் வைத்திருக்கும் அரசாங்கம் தனது முன்மொழிவுகளை வெளியிட வேண்டும் என தெரிவித்தார்.
இருப்பினும் தமது ஆட்சியில் அதிகாரப் பகிர்வு எந்த வடிவத்தில் இருக்கும் என்பதை ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னரே அறிவிக்கப்படும் எனவும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் மாகாணங்களுக்கு சுயாட்சியை வழங்குவதை இலக்காகக் கொண்ட அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.