வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டதனை அடுத்து நேற்று (30.01.23) வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
இன்று (31.01.23) அதிகாலை முதல் வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. சில அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து கடல் சீற்றம் காரணமாக இன்றும் 2-வது நாளாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தங்களது படகுகளை பாதுகாப்பான இடத்தில் மீனவர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. மீன்பிடி தொழிலை சார்ந்துள்ள ஏராளமானோர் வேலை இழந்து வீடுகளில் முடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் அதனை சுற்றியுள்ள கோடியக்கரை, வெள்ளப்பள்ளம், ஆறுக்காட்டுதுறை, புஷ்பவனம், மணியன்தீவு உள்பட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். இவர்கள் பைபர் மற்றும் விசைப்படகுகளில் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.