157
வேலன் சுவாமிகளுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண வருகையை எதிர்த்து நடத்தப்பட்ட அமைதி வழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் ஊடாக காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை , காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொண்டு காயங்களை ஏற்படுத்தியமை , சட்டவிரோத கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் கடந்த 18ஆம் திகதி வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டு, அன்றைய தினம் இரவு மன்றில் முற்படுத்தப்பட்ட வேளை , வழக்கு விசாரணைகளை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்த மன்று வேலன் சுவாமிகளை பிணையில் விடுவித்தது.
அந்நிலையில் மறுநாள் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் எஸ். சோமபாலன் மற்றும் வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க செயலாளர் ஜெனிற்ரா ஆகியோருக்கு எதிராகவும் மன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதனை அடுத்து அவர்களையும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மன்றில் முன்னிலையாகுமாறு மன்று அழைப்பாணை விடுத்திருந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை , யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ. ஏ. ஆனந்தராசா முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன் போது பிணையில் விடுக்கப்பட்டுள்ள வேலன் சுவாமிகள் மற்றும் அழைப்பாணை விடுக்கப்பட்ட இருவருமாக மூவரும் மன்றில் முன்னிலையானார்கள்.
அதனை அடுத்து அழைப்பாணை விடுக்கப்பட்ட இருவரையும் தலா ஒரு இலட்ச ரூபாய் சரீர பிணையில் செல்ல அனுமதித்த மன்று , அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு சென்று வாய் மூல வாக்குமூலத்தை அளிக்குமாறு நீதவான் உத்தரவிட்ட நீதவான் வழக்கினை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
Spread the love