பயங்கரவாத அமைப்பான அல்கய்தாவுடன் தொடர்பில் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் IT ஊழியர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் பயங்கரவாதிகளின் நடமாட்டத்தைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், குறிப்பாக பயங்கரவாதிகளுடன் தொடர்பில் உள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்து வருவதாகவும் தெரிவிக்கப்டுகிறது.
இந்த நிலையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவுடன் தொடர்பில் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நபர், கர்நாடக தலைநகர் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு மற்றும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் இணைந்து அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர் ஆரிப் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தலைநகர் பெங்களூரில் இருக்கும் IT நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆரிப் இப்போது பெங்களூரில் வசித்து வருகிறார். அவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடனும் தொடர்பில் இருந்ததாகவும், அந்த பயங்கரவாத அமைப்பில் சேர திட்டமிட்டிருந்ததாகவும் என்ஐஏ அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
ஆரிப் கடந்த மார்ச் மாதம் ஈரான் வழியாக சிரியாவுக்குப் பயணம் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆரிப் தங்கியிருந்த வீட்டில் சோதனை செய்த அதிகாரிகள், அவரது மடிக்கணிணி மற்றும் பிற கருவிகளையும் கைப்பற்றியுள்ளனர். மேலும், தனிசந்திரா பகுதியில் உள்ள அவரது வீட்டில் வேறு எதாவது முக்கிய ஆவணங்கள் கிடைக்கிறதா என்றும் தேடி வருகின்றனர். ஆரிப் டெலிகிராம் செயலில் முழு ஈடுபாட்டுடன் இருந்ததாகவும் அவர் மீண்டும் சிரியாவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.