விடுதலைக்காய் எழுச்சிக்கொள்வோம் எனும் தொனிப்பொருளின் பாற்பட்டு இன்று ( 14.02.2022) நூறுகோடி மக்களின் எழுச்சி கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும் குறிப்பாக மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, நுவரெலியா, அநுராதபுரம், மாத்தறை, கொழும்பு, மாத்தளை என பல்வேறு மாவட்டங்களிலும் நூறுகோடி மக்களின் எழுச்சி கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இந்த உலகத்தில் வாழ்கின்ற பெண்கள் வன்முறைக்கு உட்படுவதற்கு எதிராக 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ்வெழுச்சி பயணம் இந்த வருடம் அதன் தசாப்தத்தை எட்டியிருக்கின்றது.
இந்தவகையில் இந்த வருடம் விடுதலைக்காய் எழுச்சிக் கொள்வோம் எனும் தொனிப்பொருளானது தந்தையாதிக்கம், தந்தையாதிக்கத்தால் உருவாக்கப்படுகின்ற ஆதிக்கங்கள், முதலாளித்துவம், வன்முறைகள், தனிமனிதவாதம், சுரண்டல், பிரிவினை என்பவற்றில் இருந்து விடுதலை பெறுவோம் என்பதாக விரிவாக்கஞ் செய்யப்பட்டு உலகெங்கிலும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
குறிப்பாக பெண்கள், பால்நிலை பல்வகையினர் ஆகியோர் இந்த உலகத்தில் வன்முறைக்குட்படுத்தப்படாத வகையிலும், அத்தகைய வன்முறைகளுக்கு எதிராகவும் இவ்வெழுச்சிக் கொள்ளலானது முன்னெடுக்கப்படுவதுடன், மிகச் சிறப்பாக இலங்கையின் இத்தகையதொரு பொருளாதார நெருக்கடி சூழலில் எங்களின் அறிவிலும் திறனிலும் அதேவேளை எங்களது உழைப்பிலும் உற்பத்தியிலும் தங்கிநிற்கும் வாழ்தலை கொண்டாடும் வகையிலும் நூறுகோடி மக்களின் எழுச்சி கொண்டாப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
மேலும் பூமிக்கெதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகளை முடிவிற்கு கொண்டு வருவோம் எனும் நோக்கிலும் இந்த வருட எழுச்சிக் கொள்ளலானது முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும் பெண்களும், சமத்துவமான வாழ்தலை விரும்புகின்ற அனைவரும், இத்தகைய வாழ்தலை நோக்கி பயணப்படுகின்ற சிறுவர்களும் கலைகளுக்கூடாக எழுச்சிக் கெண்டிருக்கிறார்கள். சமத்துவமான வாழ்தலை விரும்புகின்ற, வன்முறை செய்யாத புதியதொரு பண்பாட்டை உருவாக்குவோம்; எழுச்சிக் கொள்வோம்.
இரா.சுலக்ஷனா