வங்காள மொழியை அரசகரும மொழியாகப் பிரகடனப்படுத்துமாறு வங்காள தேசத்தில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் உயிர்நீத்த மாணவர்களின் நினைவு நாளாகிய பெப்ரவரி 21 ஐ உலகளவில் மொழி தொடர்பாகக் கொண்டாடப்படும் நாளாக அங்கீகரிக்குமாறு கோரி நடைபெற்ற பல்வேறு பிரயத்தனங்களின் விளைவாக ஐக்கிய நாடுகளின் யுனெஸ்கோ அமைப்பு பெப்ரவரி 21 ஐ உலக தாய்மொழிகள் நாளாக அறிவித்து அது கொண்டாடப்பட்டு வருகின்றது.
பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் உலகில் புளக்கத்தில் இருந்து வரும் மொழிகளுக்குச் சொந்தமான மக்கள் இந்த நாளில் தமது மொழியைப் பாதுகாத்து முன்னெடுப்பதற்கான காத்திரமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையினைப் பற்றி அறிந்து கொள்ள முடிகின்றது. குறிப்பாக தத்தமது மொழிகள் தொடர்பில் கவனஞ்செலுத்த வேண்டிய விடயங்கள் சார்ந்து தொனிப் பொருள்களை உருவாக்கி அது தொடர்பிலான காத்திரமான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்தவகையில் இலங்கையில் தமிழ்மொழி தொடர்பாக இத்தகைய நடவடிக்கைகள் 2002 ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கையின் கிழக்கிலே மூன்றாவதுகண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழுவினர் ஒவ்வொரு வருடமும் உலகத் தாய்மொழி நாளைக் கொண்டாடி வருகின்றார்கள். இக்கொண்டாட்டங்கள் சமூகத்தில் காத்திரமான செயற்பாடுகளை முன்னிறுத்தி இடம்பெற்று வருகின்றன. உதாரணமாக இத்தினத்திலே தமிழ் மொழியில் பாடங்களைப் போதித்த, போதித்து வருகின்ற ஆசிரியர்களுக்கு சிறுவர்கள் மல்லிகைப் பூக்கள் கொடுத்து வாழ்த்துதுத் தெரிவிக்கும் செயற்பாடு, தமிழின் உள்ளுர் இசை மரபை முன்னெடுத்து வரும் இசைக்கலைஞர்களைக் கொண்டாடுதல் என்று பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமையைக் குறிப்பிட முடியும்.
இப்பின்புலத்தில் இந்த வருடம் வாய்மொழி அறிவாளர்தம் மரபைக் கொண்டாடுவோம் எனுந்தொனிப் பொருளில் உலகத்தாய்மொழிகள் நாளைக் கொண்டாட மூன்றாவதுகண் நண்பர்கள் ஆர்வஞ் செலுத்துகின்றார்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரிலிருந்தே தீர்க்கமான வரலாற்றைக் கொண்டுள்ள தமிழ்மொழியும் தமிழர்தம் பண்பாடுகளும் வாய்மொழி மரபை அடிநாதமாகக் கொண்டு இயக்கம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வாய்மொழி மரபானது நிகழ்த்துகைகள், நினைவுகள் ஊடாக புதுப்பிக்கப்பட்டுத் தொடர்வதைக் காண்கின்றோம். அதாவது தமிழர்களின் உள்ளுர் அறிவுப் பண்பாடுகளில் மிகப்பெரும்பாலானவை தொடர்ச்சியான செயற்பாடுகள் ஊடாக நினைவுகள் வெளிக்கொண்டுவரப்பட்டு இயக்கம் பெறுபவையாக இருப்பதனைக் காண்கின்றோம்.
உதாரணமாக உள்ளுர் வைத்தியர் ஒருவர் தன்னுடைய ஞாபகத்தில் தேக்கி வைத்துள்ள சிகிச்சை முறைமைகளைத் தன்னுடைய பிரயோகத்தின் ஊடாக அடுத்த தலைமுறையினருக்குப் பயிற்றுவிக்கும் பண்பாட்டைக் காண முடிகின்றது. இவ்வாறே மிகப்பெரும்பாலும் ஒவ்வொரு துறைகள் சார்ந்தும் உள்ளுர்ப் பண்பாடுகளில் அறிவு முறைகள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த வாய்மொழி நிகழ்த்துகைப் பண்பாடானது மிகப்பெரும்பாலும் சூழலின் தட்ப வெப்ப நிலைமைகளைப் புரிந்து கொண்டு சூழலுக்கு நட்பான முறைமைகளில் இயற்கை வளங்களின் நிலைபேறான தன்மையினைப் பாதுகாக்கும் வகையில் நீண்டகால பிரயோகம் அதன்மூலமான பரிசோதனைகள் ஊடாகத் தொடரப்பட்டு வருவதனையும் விளங்கிக்கொள்ள முடிகின்றது. இத்தோடு இத்தகைய உள்ளுர் அறிவுருவாக்க முறைமைகள் அனைத்தும் பொது உடமையாக விளங்கி வருவதும் கவனத்திற்குரியது.
உள்ளுர்களின் தற்சார்பான பொருளாதார வாழ்வியலை வலுப்படுத்துவதிலும் வளப்படுத்துவதிலும் இந்த வாய்மொழி அறிவாளர்களின் வகிபாகம் அளப்பரியதாக விளங்கி வருகின்றது.
பெண்ணிலைவாத ஆராய்ச்சி அணுகுமுறைகளும், பழங்குடிகள் பற்றிய ஆய்வறிவு அணுகுமுறைகளும் தற்போது உலகந்தழுவி மேற்படி வாய்மொழி அறிவாளர்தம் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டி வருகின்றன.
ஆனால் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து விருத்தியுற்றுள்ள மேற்கைரோப்பிய காலனித்துவ ஆக்கிரமிப்பும் அது உருவாக்கிய காலனிய அறிவும் அறிவின் அளவுகோலாக எழுத்து மொழியைப் பிரகடனப்படுத்தியது. இதனால் நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்ட உள்ளுர் வாய்மொழி அறிவாளர்தம் அறிவு மரபு பாமரத்தனமானது, படிப்பறிவற்றது என்று தட்டிக்கழிக்கப்பட்டன. இதனூடாக நவீன தலைமுறையினர் தமது சூழலிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டார்கள், அறிவும், தொழில்நுட்பமும் மேற்கிலிருந்து வருபவை என்பதை நம்புகின்ற நுகர்வு மனிதர்களாக வடிவமைக்கப்பட்டார்கள். இன்றைய நவீன கல்வி முறைமைகள் இந்த நிலைமைகளை மேலும் வலுப்படுத்தி வருகின்றன.
எனவே! இன்றைய காலத்தில் யாரிடமும் கையேந்தாத தற்சார்புப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய உண்மை நிருபிக்கப்பட்டு வரும் சூழலில் இத்தகைய தற்சார்புப் பண்பாட்டின் மூலங்களாக இயங்கிக்கொண்டிருக்கும் உள்ளுர் வாய்மொழி அறிவாளர்களின் திறன்களையும், மனப்பாங்கினையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அத்தோடு உள்ளுர் அறிவு, திறன்களை மூலமாகக்கொண்ட செயற்பாடுகளை மீளுருவாக்கி முன்னெடுக்க வேண்டியதும் தேவையாக உணரப்படுகின்றது.
ஆகவே தமிழ்ப் பண்பாடுகளின் தற்சார்புத் தன்மைகளை வலுப்படுத்தும் வாய்மொழி அறிவாளர்தம் மரபை அறிந்து கொள்வதற்கும் அதனையிட்டு ஆக்கபூர்வமான பிரயோகங்களில் ஈடுபடுவதற்கும் ஏற்றவகையில் இந்த வருடத்தின் உலகத்தாய்மொழிகள் தினத்தைக் கொண்டாடுவோம்.
‘வாய்மொழி அறிவாளர்தம் திறன் அறிவோம்! கொண்டாடுவோம்!
எங்களின் அறிவில் எங்களின் திறனில் தங்கி நிற்போம்’
கலாநிதி சி.ஜெயசங்கர், து.கௌரீஸ்வரன்,
மூன்றாவதுகண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டுக் குழு.