170
யாழ்ப்பாணம் சாட்டி கடற்கரையை அண்மித்த பகுதிகளில் , 21 ஆயிரத்து 175 கடலட்டைகளுடன் , 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரு வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 12 பேரையும் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தியை அடுத்து 12 பேரையும் தலா 50 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் செல்ல நீதவான் அனுமதித்தார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
சட்டவிரோதமான முறையில் கடலட்டைகளை கொண்டு செல்வதாக காவல்துறையினருக்கு கிடைக்க இரகசிய தகவலில் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அப்பகுதிகளில் சோதனைகளை முன்னெடுத்த வேளை , உரிய அனுமதிகள் இன்றி கடலட்டைகளை கடத்தி சென்ற குற்றத்தில் 11 சந்தேக நபர்களை கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து 9 ஆயிரத்து 875 கடலட்டைகளை மீட்டு இருந்தனர்.
அதேவேளை மற்றுமொரு இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் , அவரிடமிருந்து 11 ஆயிரத்து 300 கடலட்டைகளையும் மீட்டு இருந்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் ஊர்காவற்துறை நீதிமன்றில் அவர்களை முற்படுத்திய போது , மன்று அவர்களை பிணையில் செல்ல அனுமதித்தது.
இதேவேளை பருத்தித்தீவில் சீனர்களின் கடலட்டை பண்ணையில் 40 ஆயிரம் கடலட்டைகள் விடப்பட்ட நிலையில் மீண்டும் 100 கடலட்டைகளையே பிடித்தனர் எனும் செய்தி கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love