172
யாழ்ப்பாண மாநகர சபைக்கு விற்பனை மேம்படுத்த வரியின் முற்பணத்தினை செலுத்தினால் மாத்திரமே யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சிக்கு அனுமதி வழங்குவது என யாழ்.மாநகர சபை நிதி குழு தீர்மானித்துள்ளது.
கடந்த 2019, 2020, 2022 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சர்வதேச வர்த்தகக் கண்காட்சிக்கான விற்பனை மேம்படுத்தல் வரி மற்றும் கேளிக்கை வரி நிலுவையாகச் சுமார் 44 லட்சம் ரூபா நீண்ட காலமாகச் செலுத்தப்படாமல் ஏற்பாட்டாளர்கள் காலத்தைக் கடத்தினர்.
மாநகர சபைக்கு செலுத்த வேண்டிய பணத்தினை செலுத்த தவறின், இம்முறை கண்காட்சிக்கு அனுமதி வழங்குவதில்லை என மாநகர சபையால் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து 2022 ஆம் ஆண்டு வரையான நிலுவையான ரூபா 44 லட்சத்தைச் செலுத்தியுள்ள ஏற்பாட்டாளர்கள், 2023 ஆம் ஆண்டுக்கான வரி முற்பணத்தைச் செலுத்தாமல், வரிக் கழிவு வழங்குமாறு கோரிக்கையையும் முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில், யாழ்ப்பாண மாநகர சபையின் நிதிக்குழு, முதல்வர் இ. ஆர்னோல்ட் தலைமையில் இன்றைய தினம் திங்கட்கிழமை கூடி, யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி ஏற்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்ட வரிச் சலுகைக் கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்தது. அதன் போது, வர்த்தகக் கண்காட்சியில், தமது வியாபர பொருட்களை காட்சிப்படுத்தவுள்ள, வர்த் தகர்களிடம் முழுமையான கட்டணங்களை அறவிட்டுள்ள ஏற்பாட்டாளர்கள் மாநகர சபைக்குரிய வரியைச் செலுத்தப் பின்னடிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
கடந்த கால – கசப்பான அனுபவங்களின் அடிப்படையில் மாநகர சபையினால் கோரப்பட்டுள்ள விற்பனை மேம்படுத்தல் வரி முற்பணத்தைச் செலுத்தாவிடின் நிகழ்வுக்கான அனுமதியை வழங்குவதில்லை. அத்துடன் மாநகர சபையினால் வழங்கப்படும் நலச் சேவைகளை வழங்குவதில்லை என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது, இந்தத் தீர்மானம் தொடர்பில் உடனடியாக ஏற்பாட்டாளர்களுக்கு அறிவிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி 13ஆவது வருடமாக யாழ்.முத்தவெளி மைதானத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love