ஜப்பானிய தூதரக அரசியல் பிரிவு அதிகாரியொருவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று திங்கட்கிழமை (27.02.23) மாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கலைப்பீட மாணவர் ஒன்றிய அறையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
ஜப்பானிய தூதரக அரசியல் பிரிவு அதிகாரி ஹனா ,யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் சில்வஸ்டார் ஜெல்சின், உபதலைவர் இரா தர்ஷன், மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது இலங்கையின் சுதந்திரதினத்தை முன்னிட்டு வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி முன்னெடுக்பட்ட போராட்டத்தின் நோக்கம் பற்றியும் தமிழ் மக்கள் மத்தியில் வடக்கு கிழக்கில் பொதுசன வாக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் வடக்கு கிழக்கு தழுவிய திட்டமிட்ட பௌத்தமயமாக்கல், திட்டமிட்ட நிலஅபகரிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், மகாவலி அபவிருத்தி திட்டமும் திட்டமிட்ட சிங்கள மயமாக்கமும், மட்டக்களப்பு மயிலத்தமடு மேய்ச்சல் தரவை பிரச்சினை,தமிழ் மாணவர் சமூகத்தின் மீதான அரச அடக்குமுறைகள் என பலதரப்பட்ட விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.