2022-
2022ம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரருக்கான விருதுக்கு அர்ஜெண்டினா மற்றும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் முன்கள வீரரான லயனெல் மெஸ்ஸி தொிவு செய்யப்பட்டுள்ளார். சிறந்த வீரருக்கான போட்டியில் பிரெஞ்சு முன்கள வீரர்களான கிலியன் எம்பாப்பே, கரீம் பென்சமாவை தோற்கடித்து இந்த விருதை 35 வயதான மெஸ்ஸி பெற்றுள்ளார்.
கட்டாரில் நடைபெற்ற உலகக் கிண்ணப்போட்டியில் அர்ஜென்டினாவை வழிநடத்திய மெஸ்ஸி, 2021-22ஆம் ஆண்டில் கிளப் மற்றும் தேசிய அணிக்காக 49 போட்டிகளில் விளையாடி 27 கோல்களை அடித்துள்ளார். உலகக்கிண்ணத்தொடரில் அர்ஜென்டினா அணிக்காக 7 கோல்களை அடித்து அந்த அணி வெற்றி பெற முக்கிய காரணமாக மெஸ்ஸி திகழ்ந்தார்.
இரண்டாவது முறையாக இந்த விருதை வென்ற மெஸ்ஸி கூறுகையில், “இது அருமையாக உள்ளது. எனக்கு இது மகத்தான ஆண்டு, இந்த விருதை வென்றது எனக்கு கிடைத்த கௌரவம். எனது அணி வீரர்கள் இல்லாமல் நான் இங்கே வந்திருக்க மாட்டேன். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த கனவை நிறைவேற்றியுள்ளேன். மிகச் சிலரால் மட்டுமே சாதிக்க முடிந்த ஒன்றை அடைந்திருப்பதால் நான் அதிர்ஷ்டசாலி” என்று தொிவித்துள்ளாா்
பிஃபா சிறந்த வீரருக்கான விருதை இரண்டு முறை வென்றுள்ளவர்களின் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ராபர்ட் லுவான்டோஸ்கி ஆகியோருடன் மெஸ்ஸியும் இணைந்துள்ளார்.
அதேவேளை சிறந்த வீராங்கனையாக ஸ்பெயின் மற்றும் பார்சிலோனா அணியின் நடுகள ஆட்டக்காரரான அலெக்சியா புட்டெல்லாஸ் தொிவு செய்யப்பட்டுள்ளாா்
பாரிஸில் நடந்த விழாவில், அர்ஜென்டினாவை மூன்றாவது உலகக் கிண்ண சம்பியன் பட்டத்திற்கு வழிநடத்திய லியோனெல் ஸ்கலோனி 2022ஆம் ஆண்டின் சிறந்த ஆண்கள் அணியின் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விருதாளர்களின் பட்டியல்
- சிறந்த வீரர் – லயனெல் மெஸ்ஸி
- சிறந்த வீராங்கனை – அலெக்சியா புட்டெல்லாஸ்
- சிறந்த கோல்கீப்பர்(ஆண்) – எமிலியானோ மார்ட்டினெஸ்
- சிறந்த கோல்கீப்பர்(பெண்) – மேரி எர்ப்ஸ்
- சிறந்த பயிற்சியாளர்(ஆண்) – லியோனெல் ஸ்கலோனி
- சிறந்த பயிற்சியாளர்(பெண்) – சரினா வீக்மேன்
- புஸ்காஸ் விருது – மார்சின் ஒலெக்சி
- சிறந்த ரசிகர்கள் – அர்ஜென்டினா ரசிகர்கள்
- ஃபேர் பிளே விருது – லூகா லோகோஷ்விலி