கொரோனா தாக்கம் காரணமாக தடுப்பூசி செலுத்திய பிறகு மாரடைப்பு, நீரிழிவு , பக்கவாதம் போன்ற நோய்களின் பாதிப்பு 4 முதல் 5 சதவிகிதம் அதிகரித்ததாக உலக சுகாதார் அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.
அடுத்த சில மாதங்களில் இந்த வைரஸ் ஒட்டு மொத்த உலகத்திற்கும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா பாதிப்பால் பல ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள், பொருளாதார பாதிப்பு என எண்ணற்ற பாதிப்புகளை ஏற்படுத்தியது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த போடப்பட்ட பொதுமுடக்கத்தால் மக்கள் வீடுகளுக்குள் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், மனதளவிலும் மக்களை கடுமையாக பாதிக்கப்படக் கூடியதாக கொரோனா பெருந்தொற்று மாறிப்போனது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு அதிக அளவில் தடுப்பூசிகள் போடத் தொடங்கிய பிறகே வைரசின் வீரியம் குறையத்தொடங்கியது. கொரோனா வைரஸ் பரவலின் வேகமும் தணியத்தொடங்கிய பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
சுமார் 2 ஆண்டுகளாக கடும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் பரவல் தற்போது குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்ட உலக சுகாதார் அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் கொரோனா தாக்கம் காரணமாக தடுப்பூசி செலுத்திய பிறகு மாரடைப்பு, நீரிழிவு , பக்கவாதம் போன்ற நோய்களின் பாதிப்பு 4 முதல் 5 சதவிகிதம் அதிகரித்ததாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும் போது, கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த எதிர்ப்பு சக்தியை கடக்கூடிய அளவுக்கு வைரைஸ் மாறுபாடு அடையும் சிறு ஆபத்து உள்ளது. எனவே, மாரடைப்பு, நரம்பு மண்டல செயல் இழப்பு போன்ற பல கொடிய நோய்களுக்கு கொரோனாவிற்கு பிந்தைய பாதிப்பு காரணமாக இருக்கலாம். கொரோனா பெருந்தொற்றுக்கு பின் இது 4 முதல் 5 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இவற்றை தொடர்ந்து கண்காணிப்பது அவசியமான ஒன்றாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை “மாஸ்க் அணிவதை பொறுத்தவரை இப்போது அனைவருக்கும் கொரோனா எதிர்ப்பு சக்தி நன்றாக இருப்பதால் தீவிர கட்டுப்பாடுகள் தேவையில்லை. காய்ச்சல் , நடுக்கம், இருமல் வந்தால் மாஸ்க் போட்டுக்கொள்வது நல்லது. மாஸ்க் போடாமல் இருமினால் எந்த நோயாக இருந்தாலும் பரவ வாய்ப்புள்ளது. மாஸ்க் போடுவது சுவாசம் சம்பந்தப்பட்ட வைரஸ்கள் பரவுவதை தடுக்க உதவும். எனவே மாஸ்க் போடுவதை ஒரு பழக்கமாக கொள்வது நல்லது. குறிப்பாக சில இணைநோய்கள் இருப்பவர்கள் மாஸ்க் அணிவது வெளியில் செல்வது அவர்களுக்கு நல்லது” எனவும் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.