வருடம் தோறும் மார்ச் மாதம் 08 ஆம் திகதி கொண்டாடப்படும் உலக மகளிர் தினம் அன்றைய தினத்தில் மட்டும் கொண்டாடப்பட வேண்டியவர்களாகவே பெண்களை வடிவமைத்து வைத்திருக்கின்றது. இங்கு கொண்டாட்டம் என்பது அந்த நாளில் அவர்களுக்கு புகழாரம் சூட்டுதல் என்பதாகத்தான் பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு வருடத்தின் ஒருநாளில் கொண்டாடப்படுபவர்களின் இன்னல்கள், சுமைகள், வன்முறைகள், குறிப்பாக அவர்களின் பால் சார்ந்தும் பால்நிலைசார்ந்தும் நிலவுகின்ற அசமத்துவங்கள் சாதாரணமாக கடந்து போகக்கூடியவையாகவே முற்கற்பிதங்கள் வழி வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. எனினும் அசமத்துவங்களால் நிரம்பிவழியும் சமூகத்தில் பால்நிலை சமத்துவத்தையும், வன்முறையற்ற வாழ்தலையும் நோக்கி சமூகச் செயற்பாட்டாளர்கள், பெண்ணிலைவாதிகள், வன்முறையற்ற வாழ்தலை விரும்புகின்ற பெண்கள், ஆண்கள், வெவ்வேறு அமைப்புகள் செயற்பட்டு கொண்டு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பெண்ணின் உயிரியல் அமைப்பு சார்ந்தும், அவளது பால்நிலை சார்ந்தும் சமூகத்தில் கொடுக்கப்படுகின்ற இடம் என்பது பெரும்பாலும் அந்த அந்த சமூகப்பிரிவுகளால் வடிவமைக்கப்பட்டு இருக்கின்ற முற்கற்பிதங்களின் வழி தீர்மானிக்கப்படுகின்றது.
குறிப்பாக சொல்லப்போனால் இருண்ட மேகஞ்சுற்றி சுருண்டு சுழி எரியுண் கொண்டையாள்…. ( குற்றாலக்குறவஞ்சி) ( இருண்ட மேகங்கள் சுருண்டு கிடப்பது போல கூந்தலை உடையவள்) என தொடங்கி பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும் என சில இலக்கணங்களை, ஆண் நோக்குநிலை இலக்கணங்களை கட்டமைத்து வைத்திருக்கின்றது.
இதனுடைய தொடர்ச்சியாக பெண்ணை பண்டமாக பாவித்தலை நோக்கும் போது, சங்க இலக்கியத்தில் பரதமை ஒழுக்கம் தொடங்கி இன்றைய விளம்பரங்களில் நுகர்வு பண்டமாக பெண்ணை காட்சிப்படுத்துவதை காணலாம். மேலும் யதார்த்தத்திற்கு புறம்பான வகையில் வியாபார நோக்கில் பெண்களை விளம்பரங்களில் காட்சிப்படுத்தப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக விளம்பரங்களில் எத்தனை மணிநேர வீட்டு வேலையாக இருந்தாலும் சரி பெண் சலிப்புத்தட்டாமல் சிரித்துக் கொண்டே செய்வதாக காட்சிப்படுத்தப்படுவதை பார்க்கலாம். அதே நேரம் நிறம் சார்ந்து, அவரவர் சமூகஅமைப்பு சார்ந்து வடிவமைக்கப்பட்டுள்ள கற்பிதங்களின் வழி பெண்களை விளம்பரங்களில் காட்சிப்படுத்துவதும் அதன்வழி வணிகவிரிவாக்கச் செயற்பாடுகளை முன்னெடுப்பதையும் அவதானிக்கமுடிகின்றது.
இவ்வாறான வணிகவிரிவாக்க நோக்குடைய விளம்பரங்கள் பல்தேசிய கம்பனிகளின் பொருட்களுக்கான கேள்வி நிரம்பலை அதிகரிப்பதை நோக்காக கொண்டே முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக பெண்கள் என்றால் வெள்ளையாகத்தான் இருக்க வேண்டும், நீண்டகூந்தல் இருக்க வேண்டும், மென்மையானவளாக இருக்க வேண்டும் போன்றவகையான கற்பிதங்களை முன்னிறுத்தியே விளம்பரப்படுத்தல்கள் யதார்த்தத்திற்கு புறம்பான வாழ்க்கைச் சூழலை காட்டுவதோடு பெண் சார்ந்த கற்பிதங்களை மேலும் வலுவடைய செய்துவிடுகின்றன.
இதேநேரம் பெண்கள் தினத்தில் கூட பெண்கள் தின்பண்டங்களை பரிமாறுதல், கொண்டாட்டத்திற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்தல், ஒழுங்குப்படுத்தல் என அனைத்து வேலைகளையும் பார்த்தாக வேண்டியிருக்கிறது. மறுபுறம் பெண்களை இலக்கு வைத்து வணிக மேலாண்மைகள் சில பிரத்தியேக செயலிகளை பரிந்துரை செய்து பதிவிறக்கம் செய்ய வைப்பதன் ஊடாகவும் தனிப்பட்ட தகவல்களை திருடுதல் அதன் வழி தங்களது பொருட்களுக்கான கேள்விகளை அதிகரித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதையும் அவதானிக்க முடிகின்றது. பெண்களை கௌரவித்தல் என்கின்ற போர்வையின் கீழ் உழைப்புச்சுரண்டல் என்பது சர்வசாதாரணமாக முன்னெடுக்கப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.
இவ்வாறு நாளும் பொழுதும் பல விதங்களிலும் சுரண்டப்படுகின்ற, கட்டுபாட்டுக்குள் வைக்கப்படுகின்ற பெண்களின் வலுவாக்கம் என்பதும் விடுதலை என்பதும் அந்த அந்த சமூகங்களின் முற்கற்பிதங்கள் அந்த அந்த சமூகங்களால் கட்டுடைக்கப்படும் போதும், வன்முறையற்ற வாழ்தலை விரும்புகின்ற, பால்நிலை சமத்துவத்தை விரும்புகின்ற சமூகங்களின் உருவாக்கத்தின் போதுமே சாத்தியமடையும்.
இரா.சுலக்ஷனா