Home இலங்கை நீதித் துறை VS சட்டத்துறை – முடிந்தால் நீதிபதிகளை நாடாளுமன்றிற்கு அழைத்துப் பாருங்கள்!

நீதித் துறை VS சட்டத்துறை – முடிந்தால் நீதிபதிகளை நாடாளுமன்றிற்கு அழைத்துப் பாருங்கள்!

by admin

முடிந்தால் நீதிபதிகளை நாடாளுமன்றத்திற்கு அழைத்துப் பாருங்கள்!

உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பினர் முன்வைத்துள்ள சிறப்புரிமை மீறல் பிரேரணை முற்றிலும் தவறானது என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளார்.

முடிந்தால் நீதிபதிகளை நாடாளுமன்றத்திற்கு அழைத்து விசாரணை நடத்தி பாருங்கள் என்றும் அதன் பின்னர் நிகழ்வதை தாம் பார்த்துக் கொள்வதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க சவால் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய அவர், நாடாளுமன்றத்தின் விவகாரத்தில் நீதிமன்றம் தடையை ஏற்படுத்தவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

வரவு செலவு திட்டத்தின் ஊடாக நாடாளுமன்றத்தினால் ஒதுக்கப்பட்ட நிதியை நிறைவேற்றுத்துறை கட்டுப்படுத்தியமை காரணமாகவே நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது என்றும் அரசியல் அதிகாரம் நீதிமன்றத்துக்கு பிரயோகிக்கப்பட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

நீதிபதிகளை நாடாளுமன்ற சிறப்புக்குழுவுக்கு அழைத்தால் பாரிய விளைவுகள் ஏற்படும்!

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கான நிதி விடுவிப்பு தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடையுத்தரவை ஆளும் தரப்பினர் நாடாளுமன்ற சிறப்புரிமை ஊடாக விமர்சிப்பது முற்றிலும் தவறானது என பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நீதிபதிகளை நாடாளுமன்ற சிறப்புக்குழுவுக்கு அழைத்து அவர்களை விசாரணை செய்தால் நாட்டில் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்றும் ஆகவே நீதித்துறை சவாலுக்குட்படுத்தி அரசியலமைப்பை மலினப்படுத்துவதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த பிரேரணையை செயற்படுத்த வேண்டுமாயின் உள்ளூராட்சித் தேர்தல் குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள ரிட் மனுக்கலை இடைநிறுத்த வேண்டும் என்றும் வழக்குகள் தொடர்பாக கட்டளை பிறப்பிக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது என்றும் குறிப்பிட்டார்.

நீதிபதிகளை கேள்வி கேட்டால் சர்வதேச மட்டத்தில் பாரிய நெருக்கடிளை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என்றும் நாட்டு மக்களும் நிறைவேற்றுத்துறை மற்றும் சட்டத்துறையை கடுமையாக விமர்சிப்பார்கள் என்றும் ஜி.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்ற சிறப்புரிமை நீதித் துறையை கட்டுப்படுத்த இடமளிக்க கூடாது – சஜித்

இந்நாட்டின் நீதித்துறையில் தலையிடும் மற்றும் செல்வாக்கு செலுத்தும் செயற்பாடுகள் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற சிறப்புரிமை மீறலை சாதிக்கும் வகையில் இடம்பெறக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தேர்தலை ஒத்திவைக்க இந்த அரசாங்கம் மற்றுமொரு கூட்டுச் சூழ்ச்சிக்கு நாடாளுமன்றத்தின் ஊடாக தயாராகி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More