218
மது விருந்தில் தாம் செய்த திருட்டை பற்றி பெருமையாக பேசி இருவர் காவல்துறையினரிடம் மாட்டிக் கொண்டுள்ளனர். திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற மது விருந்தொன்றில் , மது அருந்திய நிலையில் இருவர் தாம் செய்த திருட்டை பற்றி, விருந்தில் கூடியிருந்தவர்கள் மத்தியில் பெருமையாக பேசி கொண்டனர். அதன் போது, விருந்தில் கலந்து கொண்டிருந்த நபர் ஒருவர் அது தொடர்பில் கோப்பாய் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன் போது , அவர்கள் இருவரும் திருநெல்வேலி தலங்காவற் பிள்ளையார் கோவிலை அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த சில தினங்களுக்கு கூலி வேலை செய்துள்ளனர்.
அதன் போது , வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த 5 பவுண் தங்க சங்கிலி ஒன்றினை நூதன முறையில் திருடியுள்ளனர். அந்த திருட்டினையே மது விருந்தில் பெருமையாக பேசியுள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதனை அடுத்து காவல்துறையினர் குறித்த வீட்டுக்கு சென்று சம்பவம் தொடர்பில் கூறிய போதே , வீட்டாருக்கு தங்கள் நகை களவு போன விடயம் தெரியவந்துள்ளது.
அது தொடர்பில் காவல்நிலையத்தில் வீட்டார் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு நபர்களையும் காவல் நிலையத்தில் தடுத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love