கொழும்பு நகரம் உட்பட இலங்கையின் ஏழு முக்கிய நகரங்களில், நேற்று (16.03.23) காற்று மாசுபாடு மக்களை பாதிக்கும் வகையில் அதிகரித்துள்ளது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் காற்று தர சுட்டெண் (US AQI) படி, கொழும்பை சுற்றியுள்ள வளிமண்டலத்தில் உள்ள நுண் துகள்களின் அளவு (PM 2.5) நேற்று காலை 9.00 மணியளவில் 142 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று (16.03.23) காலை காற்று மாசுபாடு காரணமாக கொழும்பு நகரை சுற்றியுள்ள வளிமண்டலத்தில் இருள் சூழ்ந்து கடும் வெப்பம் நிலவியது.
இது தவிர யாழ்ப்பாணம், குருநாகல், கண்டி, கேகாலை, புத்தளம் மற்றும் பதுளை ஆகிய நகரங்களின் வளிமண்டலத்தில் நுண் துகள்களின் அளவு (PM 2.5) அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஆசிரி கருணாவர்தன தெரிவித்துள்ளார். .
மேலும், யாழ்ப்பாணம் – 120, குருநாகல் – 117, கண்டி – 103, கேகாலை – 106, புத்தளம் – 129, பதுளை – 109 என காற்றுமாசுபாடு பதிவாகி உள்ளது.
வளிமண்டலத்தில் நுண்ணிய துகள்களின் அளவு அதிகரிப்பதால், முதியோர்கள், குழந்தைகள் உட்பட நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது.