2024 ஆரம்பத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜனாதிபதித் தேர்தல் குறித்து நாடாளுமன்றக் கூட்டத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பிரமுகர்களிடமும் ஜனாதிபதி இது குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை ஜனாதிபதித் தேர்தல் நடத்தும் வரை எந்தவொரு தேர்தலையும் நடத்தாமல் இருக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படாது என ஜனாதிபதி எங்கும் குறிப்பிடவில்லை எனவும் அதில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களுக்காக வலுவான கூட்டணியை உருவாக்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான சில குழுக்கள் இணைந்து இந்தக் கூட்டணியை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும், தலைமைப் பொறுப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும், இணைத்தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காக பண்டாரநாயக்கா குமாரதுங்கவை நியமிப்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.