இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கப்படவுள்ள நீட்டிக்கப்பட்ட கடன் வசதிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அனுமதி இன்று (20) அறிவிக்கப்பட உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு இன்று இரவு கூடி இதற்கான அனுமதி தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.கூட்டத்தின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் ஊடாக இது தொடர்பான தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி இன்னும் 4 ஆண்டுகளில் கிடைக்கப்பெற உள்ளதுடன், முதல் தவணையாக 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மார்ச் மாத இறுதியில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை , சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவின் அனுமதியின் ஊடாக மேலும் கடன் வாங்குவது நாட்டில் நீண்டகால பிரச்சினைகளை உருவாக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது