கதிரியக்கவியல் பேராசிரியர்
மருத்துவர் குமரேசன் சந்திரசேகரன்
Kumaresan Sandrasegaran, MD, FRCR, FSAR, FESGAR, is a Senior Associate Consultant at Mayo Clinic, AZ, with special interest in Abdominal Imaging
1963 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி கொழும்பில் பிறந்த குமரேசன் சந்திரசேகரன் தனது பாடசாலைக் கல்வியை கொழும்பு ரோயல் கல்லூரியில் நிறைவு செய்து சிம்பாபேயிலுள்ள கொட்பிரி ஹக்கின்ஸ் மருத்துவக் கல்லூரியில் (Godfrey Huggins Medical School, Zimbabwe) பயின்று 1985 ஆண்டு மருத்துவப் பட்டத்தைப் பெற்றார்.
அமெரிக்காவில் வசிக்கும் குமரேசன் சந்திரசேகரன் அமெரிக்காவில் முதல்நிலை மருத்துவமனையாக விளங்கும் மையோ கிளினிக்கில் விசேட கதிரியக்கவியல் மருத்துவ நிபுணராகக் கடமையாற்றுகின்றார். 2016 ஆம் ஆண்டு முதல் கதிரியக்கவியல் பேராசிரியராக (Professor of Radiology) பதவி உயர்வு பெற்றுள்ள குமரேசன் அமெரிக்காவிலுள்ள பல்வேறு கதிரியக்கவியல் சங்கங்களின் பணிப்பாளர் சபைகளிலும் தலைமைப் பொறுப்பிலும் பதவி வகிக்கின்றார்.
ஒருவருக்கு ஏற்பட்ட நோயைக் கண்டறிவதில் உடல் உள்ளுறுப்புக்களை ஆய்வு செய்யும் கதிரியக்கவியல் பரிசோதனை (Radiology Imaging) என்பது பிரதானமானதாக விளங்குகின்றது. பேராசிரியர் குமரேசன் அவர்கள் வயிற்றுடன் தொடர்புடைய கதிரியக்கவியல் (Abdominal Imaging) பிரிவில் விசேட நிபுணத்துவம் பெற்றவர். குறிப்பாக வயிற்றுப் பகுதியில் ஏற்படும் புற்றுநோயைக் கண்டறிவதிலும் வயிற்றுப் பகுதியில் ஏற்படும் சிக்கலான புற்றுநோய்க்கட்டிகளை சத்திரசிகிச்சை செய்து அகற்றிய பின்னர் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் பற்றிய தீர்மானம் மேற்கொள்வதிலும் விசேட நிபுணத்துவமும் அனுபவமும் பெற்றவர் (He has expertise in: Imaging of postoperative imaging after complex surgery, to sort out what is expected after surgery and what is a complication). மேலும் கதிரியக்கவியல் வழிகாட்டலில் மரபணு மூலக்கூறுகளின் அடிப்படையில் புற்றுநோய்களை இனங்காண்பதற்காக மேற்கொள்ளப்படும் இழைய மாதிரிகளைப் பெற்றுக்கொள்ளும் செயல்முறையிலும் உடலில் தேங்கியிருக்கும் வேண்டாத திரவங்களை வெளியேற்றும் செயல்முறையிலும் விசேட நிபுணத்துவம் பெற்றவர்(He has expertise in: Image-guided biopsy and drainages, especially guided biopsy of focal masses for molecular genetics). பேராசிரியர் குமரேசன் சந்திரசேகரன் அவர்கள் இன்று உலகில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய முன்னணி கதிரியக்கவியல் பேராசிரியர்களில் ஒருவர்.
பேராசிரியர் குமரேசன் அவர்கள் வயிற்றுப் பகுதி கதிரியக்கவியல் படங்களை ஒப்பிட்டு மதிப்பீடு செய்து இதுவரை 170 இற்கும் மேற்பட்ட மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகளை பிரசுரித்துள்ளதுடன் 14 நாடுகளில் நடைபெற்ற கருத்தரங்குகளில் 70 இற்கும் மேற்பட்ட விரிவுரைகளையும் நிகழ்த்தியுள்ளார். கதிரியக்கவியல் துறைசார்ந்த 3 நூல்களை எழுதியுள்ளதுடன் 20 நூல்களில் அத்தியாயங்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்கள் அமெரிக்கப் பல்கலைக்கழங்களில் பாடநூல்களாக இடம்பெற்றுள்ளன.
வட அமெரிக்க கதிரியக்கவியல் சங்கம் 2013, 2014, 2016, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் சிறந்த ஆசிரியர்களாகத் தெரிவு செய்தவர்களில் பேராசிரியர் குமரேசனும் ஒருவர். குமரேசன் சந்திரசேகரன் கற்பித்தலில் காண்பித்த சிறந்த மேதகைமைக்காக 2012 இல் இன்டியான மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் சபை விருதையும் பெற்றுள்ளார்.
இலங்கையின் மருத்துவ வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்திய யாழ். போதனா மருத்துவமனை .யாழ். போதனா மருத்துவமனையில் அமைந்துள்ள மருத்துவ அருங்காட்சியகம் மற்றும் தொலைமருத்துவப் பிரிவானது (Jaffna Medical Museum & Telemedicine Unit) யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி அவர்களது தூரநோக்கு சிந்தனையில் 2018 ஆம் ஆண்டு உருவானது. அருங்காட்சியக அலகில் மருத்துவக் கற்கைநெறிசார்ந்த பன்னாட்டு நிபுணர்கள் கலந்துகொள்ளும் தொலை மருத்துவப் பயிலரங்குகள், மருத்துவ நிபுணர்களுக்கான நேரலை – நிகழ்நிலை பன்னாட்டுத் தேர்வுகள் முதலான பல்வேறு கல்விச் செயற்பாடுகள் நடைபெறுகின்றன.
யாழ். போதனா மருத்துவமனையில் இயங்கும் மருத்துவ அருங்காட்சியக தொலைமருத்துவப் பிரிவானது இலங்கையில் வேறு எந்த மருத்துவமனையிலும் இல்லாத தனித்துவமான சேவையை 5 ஆண்டுகளாக வழங்கி வருகிறது. சுகாதார அமைச்சினால் தொலைமருத்துவ சேவையின் முன்னோடி மருத்துவமனையாக யாழ். போதனா மருத்துவமனை அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி அவர்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களால் பாராட்டுப் பெற்றுள்ளார்.
இலங்கையின் மருத்துவ வரலாற்றில் யாழ். போதனா மருத்துவமனையில் அமைந்துள்ள அருங்காட்சியக அலகானது மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் ஏனைய மருத்துவமனைகளில் காணப்படாத வரலாற்று ஆவணங்களையும் பழமை வாய்ந்த உபகரணங்களையும் கொண்டிருப்பதுடன் நவீன தொழிநுட்பம் வாயிலாக மருத்துவத்தை மருத்துவக் கல்வியை இன்னோர் நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளது.
பேராசிரியர் குமரேசனது அர்ப்பணிப்பு மிக்க நிபுணத்துவ ஆலோசனை
பேராசிரியர் குமரேசன் சந்திரசேகரன் கடந்த 2019 செப்ரெம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் யாழ். போதனா மருத்துவமனையில் கடமையாற்றும் விசேட மருத்துவ நிபுணர்களுடனும் இலங்கையின் பிறபகுதிகளிலுள்ள மருத்துவமனைகளில் கடமையாற்றும் விசேட மருத்துவ நிபுணர்களுடனும் மற்றும் மருத்துவர்களுடனும் இணையவழி ஊடாக நடைபெறும் தொலைமருத்துவக் கலந்துரையாடல்களில் வளவாளராகப் பங்குபற்றி மருத்துவ நிபுணத்துவ ஆலோசனையைத் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றார்.
பேராசிரியர் குமரேசன் இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் சிகிச்சை பெற்ற 1000 இற்கும் மேற்பட்டவர்களுக்கு வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட சிக்கலான நோய்நிலைகள் தொடர்பாக யாழ். போதனா மருத்துவமனை மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து கதிரியக்கவியல் தொடர் படங்களை ஆய்வு செய்து நோய்களை நிருணயிப்பதிலும் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் பற்றியும் வழங்கிய மேலதிக நிபுணத்துவ ஆலோசனைகள் விலைமதிப்பிட முடியாத அளவிற்கு பெறுமதி வாய்ந்தவையாகும்.
கடந்த 2019ஆம் ஆண்டு முதலாக யாழ். போதனா மருத்துவமனையால் ஒழுங்குபடுத்தப்பட்டுத் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பல்துறைசார் மருத்துவ நிபுணர்கள் கலந்து கொள்ளும் 334 (27.03.2023 வரை) இணையவழி தொலைமருத்துவ (Multi-Disciplinary-Team-Teleradiology-Meetings) கலந்துரையாடல்களில் பேராசிரியர் குமரேசன் அவர்கள் 136 கருத்தமர்வுகளில் (Abdominal MDT Teleradiology Meetings) கலந்துகொண்டு தனது நிபுணத்துவ ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்கியுள்ளார். பேராசிரியரது அர்ப்பணிப்பான தன்னார்வ மருத்துவ ஆலோசனையானது குறிப்பாக யாழ். போதனா மருத்துவமனையிலும் மற்றும் தெல்லிப்பழை பாதை புற்றுநோய் மருத்துவமனை (Trail Cancer Hospital, Tellippalalai), வவுனியா பொது மருத்துமனை முதலான மருத்துவமனைகளில் சிசிச்சை பெற்று வருகின்ற பலருக்கும் பயனுள்ளதாக அமைந்து வருகிறது.
யாழ். போதனாவில் கடமையாற்றும் கதிரியக்கவியல் விசேட மருத்துவ நிபுணர் (Consultant Radiologist) ஒருவர் பேராசிரியர் குமரேசன் அவர்களைப் பின்வருமாறு மதிப்பிடுகிறார்:
“நாம் ஒரு மருத்துவப் பேராசிரியரிடம் படித்திருக்கிறோம், படிக்கலாம்; ஆனால் கதிரியக்கவியல் பேராசிரியரிடம் (Professor of Radiology) படிப்பதென்பது எமக்குப் பெரிய ஒரு கொடை. அதுவும் உலகின் சிறந்த ஒரு கதிரியக்கவியல் பேராசிரியராகவும் மருத்துவ நிபுணராகவும் விளங்கும் ஒருவரிடம் படிப்பதும் அவரது ஆலோசனையைப் பெறுவதென்பதும் மிகப் பெரிய ஒரு விடயம். அவரிடம் ஒரு நாளைக்கு ஒருமணிநேரம் படிக்க இலட்சம் ரூபா கொடுத்தாலும் நேரத்தைப் பெறுவதரிது. அவர் கடந்த 4 வருடங்களாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் 1 – 2 மணிநேரம் எம்முடன் நிகழ்நிலை காணொலி வழியாக இணைந்திருப்பார். அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் 12 மணிநேர வேறுபாடு. எமக்கு வெள்ளி காலை நேரம் 7.45 என்றால் பேராசிரியருக்கு வியாழன் இரவு 7.15. அவர் தனது கடமையை முடித்து, களைத்திருக்கும் இரவு வேளையில் நாம் தெரிவுசெய்யும் மிகவும் சிக்கலான சிரி, எம்.ஆர்.ஐ தொடர் படங்களை எம்மோடு இணைந்து பொறுமையாகப் பார்வையிடுவார். அவரது ஆலோசனையை, கருத்தைப் பெறுவது மிகவும் பெறுமதி வாய்ந்ததும் அரிதானதுமாகும். சில நாள்களில் பேராசிரியர் 15 முதல் 20 வரையான நபர்களது சிக்கலான சிரி, எம்.ஆர்.ஐ தொடர் படங்களைப் பார்வையிட்டு உறுதியான தீர்மானங்களை வழங்கியுள்ளார்.”
பேராசிரியர் குமரேசனைப் பற்றி யாழ். போதனா மருத்துமனையில் கடமையாற்றும் இரப்பை – குடலியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் விநாயகமூர்த்தி துஸ்யந்தன் (Consultant Gastroenterological Surgeon) பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
“வயிற்றுப் பகுதியில் அறுவைச் சிகிச்சை செய்வதற்கு முன் சிக்கலான நோய் நிலையுள்ள ஒருவரது நோய் தொடர்பில் பேராசிரியரிடம் கருத்தை வினவும் போது பேராசிரியர் சிரி, எம்.ஆர்.ஐ. படங்களைப் பார்த்து குறிப்பிடும் விடயங்கள், நான் அறுவைச் சிகிச்சைக் கூடத்தில் வயிற்றைக் கீறிப் பார்க்கும் போது அவர் கூறியது போன்றே இருக்கும். பேராசிரியது கருத்தினை “Multi-Disciplinary-Team-Teleradiology Meeting” இல் கேட்டபின்னர் நான் மிகுந்த நம்பிக்கையுடன் சத்திரசிகிச்சைக் கூடத்துக்குச் செல்வேன் (After receiving professor’s opinion, I will go to the theatre with confident)”.
பேராசிரியர் குமரேசன் சந்திரசேகரன் அவர்கள் மருத்துவத்துறையில் இப்பிராந்தியத்தில் சிகிச்சை பெறும் மக்களுக்கு ஆற்றிவரும் அர்ப்பணிப்பு மிக்க தனித்துவமான சேவையானது ஈடிணையற்றது.
பன்னாட்டு நரம்பியல் அறுவைச் சிகிச்சை பேராசிரியர்கள் கதிரியக்கவியல் நிபுணர்கள் வழங்கும் ஆலோசனை
யாழ். போதனா மருத்துவமனையில் நடைபெறும் மேற்குறிப்பிட்ட பன்னாட்டு நிபுணர்கள் பங்குபெறும் தொலை மருத்துவக் கலந்துரையாடல்களில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, நோர்வே, அமெரிக்கா முதலான நாடுகளில் வசிக்கும் பேராசிரியர்களும் துறைசார் விசேட மருத்துவ நிபுணர்களும் யாழ். போதனா மருத்துவமனை மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து 1250 இற்கும் மேற்பட்டவர்களுக்கு தீர்மானங்களை மேற்கொண்டுள்ளனர்.
யாழ். போதனா மருத்துவமனையில் கடந்த 4 ஆண்டுகளில் மொத்தமாக 2250 இற்கும் மேற்பட்டவர்களது கதிரியக்கவியல் படங்கள் துறைசார் நிபுணர்கள் கலந்து கொண்ட பூகோள கருத்தமர்வில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
பா. துவாரகன் , அபிவிருத்தி உத்தியோகத்தர் (பொறுப்பு)
மருத்துவ அருங்காட்சியகம் மற்றும் தொலைமருத்துவப் பிரிவு
போதனா மருத்துவமனை, யாழ்ப்பாணம்
(தொடரும்)