214
வாடகை காரை 65 இலட்ச ரூபாய்க்கு ஈடு வைத்த குற்றச்சாட்டில் மூவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது ,
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வாடகைக்கு வாகனங்களை வழங்கும் நபர் ஒருவரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மூவர் சென்று கார் ஒன்றினை வாடகைக்கு பெற்று சென்றுள்ளனர். அதற்காக ஒரு இலட்ச ரூபாய் முற்பணமும் வழங்கியுள்ளனர்.
காரினை பெற்று சென்றவர்கள் சில தினங்களில் காரில் இருந்த GPS கருவியினை அகற்றியுள்ளனர். அது காரினை வாடகைக்கு கொடுத்த நபருக்கு தெரியவந்ததை அடுத்து வாடகைக்கு காரினை பெற்றவர்களுக்கு தொடர்பினை ஏற்படுத்திய போது , அவர்களது தொடர்புகள் துண்டிக்கப்பட்டு இருந்தது.
அது தொடர்பில் உடனடியாக கோப்பாய் காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த வேளை குறித்த கார் மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்று , குறித்த வீட்டுக்கு சென்று காரினை மீட்டனர்.
காரினை வீட்டில் வைத்திருந்தவர்களிடம் விசாரணை களை முன்னெடுத்த போது , காரினை ஈடு வைத்து தம்மிடம் 65 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று சென்றனர் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காரினை வாடகைக்கு பெற்றவர் , வாடகைக்கு பெற்ற காரினை ஓட்டி சென்ற சாரதி மற்றும் காரினை வாடகைக்கு பெறும் போது சாட்சி கையெழுத்து வைத்த நபர் ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Spread the love