மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை திருத்தம் செய்யவதற்கு கடந்த வாரம் மலேசிய நாடாளுமன்றத்தில் இரண்டு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,அவை மலேசிய நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா இனி மேல் சபையில் நிறைவேற்றப்பட வேண்டும் அதன்பிறகே சட்ட வடிவம் பெறும்.
மலேசியாவில் இந்த மரண தண்டனயை ரத்து செய்யும் சட்டம் நிறைவேறியதன் பின்னா் , மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் கைதிகளுக்கு தண்டனையை மறு ஆய்வு செய்யக்கோரி முறையிட 90 நாட்கள் அனுமதி வழங்கப்படும். மலேசியாவில் தற்போது 1,341 மரண தண்டனை கைதிகள் உள்ளனர். இவர்களில் 60 சதவீத்திற்கும் மேற்பட்டவர்கள் கட்டாய மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் என சா்வதேச மன்னிப்புச் சபை தொிவித்துள்ளது.
மலேசியாவில் சிறிய குற்றங்களுக்கு கூட சவுக்கடிகள் உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்படுவதுடன் கொலை, பயங்கரவாதம் உள்ளிட்ட 11 வகையான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற விவாதங்கள் அங்கு பல ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது. மலேசியாவில் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு ஆண்டு காலமாக அங்கு மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற விவாதங்கள் அரசியல் ரீதியாக மிகவும் தீவிரமாக நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது