198
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் கிறிஸ்தவ மத சபையை சேர்ந்த கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து , வீட்டில் இருந்த வயோதிப பெண் உள்ளிட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக வீட்டாரால் அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் போதகர் உள்ளிட்ட மூவரை கைது செய்து வாக்கு மூலங்களை பெற்ற பின்னர் காவல்துறைப் பிணையில் விடுவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பெரிய வெள்ளி அன்று , கிறிஸ்தவ மத சபையில் ஒலிபெருக்கிகள் மூலம் அதிக ஒலி எழுப்பப்பட்டு செப கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அந்நிலையில் செப கூட்டம் நடத்தப்பட்ட பகுதிக்கு கல் வீச்சு நடாத்தப்பட்டதாக கூறி அருகில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த போதகர் , அவரது மகன் உள்ளிட்டோர் வீட்டில் இருந்த வயோதிப தாய் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கானவர்கள் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் போதகர் , அவரது மகன் மற்றும் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது , தாம் செப கூட்டத்தில் இருந்த போது தம் மீது கல் வீச்சு நடத்தப்பட்டதால் அவர்களது வீட்டு சென்றோம் என வாக்கு மூலம் அளித்துள்ளனர்.
அதனை அடுத்து அவர்கள் மூவரையும் காவல்துறை பிணையில் விடுத்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love