யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பருத்தித்துறை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளார். அந்நிலையில் அப்பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் போது, எழுமாற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அப்பெண்ணுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதனை அடுத்து அப்பெண்ணை விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று குறைவடைந்தமையை அடுத்து, வைத்தியசாலைகளில் இருந்த தனிமைப்படுத்தல் விடுதிகள் அகற்றப்பட்டுள்ளமையால், குறித்த பெண்ணை சாதாரண விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை குறித்த பெண் வேறு தொற்றா நோய்களுக்கு உள்ளாகி உள்ளார். அதனால் அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது. அவர் கொரோனா தடுப்பு ஊசிகள் போட்டுக்கொண்ட போதிலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதனால் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம்.
அதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் போது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிந்து செல்லவும், கொரோனா தொற்று தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் யாழ்.போதனா வைத்திய சாலை பிரதி பணிப்பாளர் வைத்திய கலாநிதி சி. ஜமுனானந்தா தெரிவித்துள்ளார்