Home இலங்கை நரம்பியல் அறுவைச்சிகிச்சை விசேட மருத்துவநிபுணர் பேராசிரியர் ரூபவதனா மகேஷ்பரன்!

நரம்பியல் அறுவைச்சிகிச்சை விசேட மருத்துவநிபுணர் பேராசிரியர் ரூபவதனா மகேஷ்பரன்!

by admin
வடபகுதியில் தொலைமருத்துவ சேவையை வழங்கும் பன்னாட்டு விசேட மருத்துவ வல்லுநர்கள்: பா. துவாரகன்,

நோர்வே நாட்டில் நரம்பியல் அறுவைச் சிகிச்சை விசேட மருத்துவ நிபுணராகவும்  பேகன் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவராகவும்  நரம்பியல் அறுவைச் சிகிச்சைத்துறைப் பேராசிரியராகவும் கடமையாற்றும் ரூபவதனா மகேஷ்பரன் 1966 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி சாவகச்சேரியில் பிறந்தார்.

Prof. Rupavathana(Ruby) Mahesparan MD, PhD

                                  

சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்ற ரூபவதனா க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் விசேட திறமைச் சித்தியைப் பெற்றார். உயர்தரப் பரீட்சையில் அதிவிசேட திறமையை வெளிப்படுத்தி யாழ். பல்கலைக்கழக மருத்துவப் பீடத்துக்குத் தெரிவானார்.

தனது 13 ஆவது வயதில் பரதநாட்டிய அரங்கேற்றம் செய்த ரூபவதனா பாடசாலை மாணவியாக இருந்த காலத்தில் சங்கீதம், நாடகம், ஆங்கிலப் பேச்சு மற்றும் விளையாட்டிலும் தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்தி சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு புகழைப் பெற்றுக் கொடுத்ததுடன் பாடசாலை வலைப்பந்தாட்ட அணி, மெய்வல்லுநர் அணி மற்றும் இல்ல விளையாட்டு அணித்தலைவியாகவும் திகழ்ந்தார்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் 9 ஆவது அணியில் பயின்ற ரூபவதனா 2 ஆவது எம்பிபிஎஸ் பரீட்சையில் முதல் வகுப்பில் சித்தியெய்தி உடற்கூற்றியல் பாடத்தில் தங்கப்பதக்கத்தை பெற்றதுடன் புள்ளி அடிப்படையில் முதல் நிலை மாணவியாகத் தெரிவானார். எதிர்பாராதவிதமாக ரூபவதனா அவர்களால் யாழ்ப்பாணத்தில் மருத்துவக் கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நோர்வேக்கு குடிபெயர்ந்து நோர்வேஜிய மொழியில் மருத்துவம் பயின்று மருத்துவமாணிப் பட்டத்தைப் பெற்றார். ரூபி அவர்கள் மருத்துவ மாணவியாக இருக்கும்போதே மூளையில் ஏற்படும் புற்றுநோய்க் கட்டிகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு முனைவர் பட்டத்தைப் (PhD) பெற்றிருந்தார் என்பது விசேடமாகக் குறிப்பிடத்தக்கது.

ரூபவதனா மருத்துவராகி உள்ளகப் பயிற்சியை நிறைவுசெய்த பின்னர் நரம்பியல் அறுவைச் சிகிச்சைத் துறையில் விசேட நிபுணத்துவப் பயிற்சியைப் பெற்று ஹொக்கலாந்து பல்கலைக்கழகப் போதனா மருத்துவமனையில் முதலாவது பெண் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணராக 2005 இல் நியமனம் பெற்றதுடன் நோர்வே நாட்டின் 4 ஆவது நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் என்ற சிறப்பையும் பெற்றார்.

இவர் நரம்புகளில் ஏற்படும் புற்றுநோய் தொடர்பிலும் மண்டையோடு, அடி மூளைச் சுரப்பி அறுவைச் சிகிச்சையிலும் மூளையில் ஏற்படும் சிதைவுகளுக்கான (Gamma knife radiosurgery) ஃகாமா கதிர்களைத் துல்லியமாகச் செலுத்தி மேற்கொள்ளும் கதிரியக்கச் சிகிச்சைகளை மேற்கொள்வதிலும் விசேட நிபுணத்துவம் பெற்றவர். மேலும் சிறுவர்களுக்குரிய மூளை-நரம்பியல் அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்வதிலும் நெடுநாளைய நரம்பியல்  குறைபாடுகளுக்கு மேற்கொள்ளும் அறுவைச் சிகிச்சையிலும் சிறப்புத் தேர்ச்சியும் அனுபவமும் பெற்றவர்.

ரூபவதனா  மகேஷ்பரன் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் நரம்பியல் அறுவைச் சிகிச்சைகளை அறிமுகம் செய்து பயிற்சி வழங்கும் பல்வேறு செயற்றிட்டங்களின் தலைமைப் பொறுப்பிலும் பதவிவகிக்கின்றார்.

சில வருடங்களுக்கு (2019 இல்) முன்னர் எதியோப்பியாவில் இரட்டைத்தலையுடன் (Encephalocele) பிறந்த பெண்குழந்தை இரட்டைத்தலை காரணமாக நித்திரை கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியிருந்தது.  ரூபவதனா நோர்வேயிலிருந்து எதியோப்பியாவிற்குச் சென்று 16 மாதங்களேயான இப் பெண்குழந்தைக்கு அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு பாலகியின் உயிர் காத்தார். ரூபவதனா அவர்கள் தொண்டாகச் செய்த அரும்பெரும் பணிகளில் இதுவும் ஒன்று.

பேராசிரியர் ரூபவதனாவின் மருத்துவ ஆராய்ச்சிகள் நரம்புடன்  தொடர்புடைய புற்றுநோயியல் மற்றும் சிறுவர்களுக்கான நரம்பியல் அறுவைச் சிகிச்சை ஆகியவற்றினைக் கருப்பொருளாகக் கொண்டவை.  உள்ளூர் மற்றும் பன்னாட்டு மருத்துவ ஆய்வேடுகளில் இவரது  37 ஆராய்ச்சிக் கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன. ரூபி அவர்கள் நோர்வேஜிய அறுவைச் சிகிச்சைக் கழகத்தினால் வெளியிடப்படும் சஞ்சிகையின் கருப்பொருள் ஆசிரியராக 2013, 2017 ஆகிய ஆண்டுகளில் பதவி வகித்துள்ளார்.

சிறுவர்களது மூளைக் கலங்களில் ஏற்படும் கட்டிகள் தொடர்பில் நோர்வே நாட்டிற்குரிய வழிகாட்டல் குறிப்புக்கள் தொகுப்பின் இணை ஆசிரியர்களில் ரூபவதனாவும் ஒருவர். இவர் நோர்வேயிலுள்ள பல்வேறு நரம்பியல் அறுவைச் சிகிச்சைச் சங்கங்களின் இயக்குநர் சபைகளில் அங்கத்தவராகவும் சிலவற்றில் பணிப்பாளராகவும் விளங்குகின்றார். குறிப்பாக நோர்வேஜிய நரம்பியல் அறுவைச் சிகிச்சை சங்கத்தின் தலைவராகவும், European Society for Stereotactic and Functional Neurosurgery (ESSFN) அமைப்பின் நோர்வே நாட்டின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் பதவியை அலங்கரிக்கின்றார்.

பேராசிரியர் ரூபவதனா நோர்வேயிலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராகவும் மருத்துவ முனைவர் பட்டப்படிப்பு (PhD) மாணவர்களது பரீட்சகராகவும் கடமையாற்றி வருகின்றார். 2005 முதல் வருடந்தோறும் இரு மாதங்கள் எதியோப்பியாவுக்குச் சென்று அடிஸ் அபாபா பல்கலைக்கழகத்தில் நரம்பியல் அறுவைச் சிகிச்சைத் துறையில் சிறப்புப் பயிற்சிபெறும் மாணவர்களுக்கு விரிவுரையும் செயல்முறைப் பயிற்சியும் அளித்து வருகின்றார்.

துறைசார் விசேட மருத்துவ வல்லுநர்கள் பங்குபற்றும் கதிரியக்கவியல் பூகோள தொலைமருத்துவக் கருத்தரங்கு (Global Multi-Disciplinary-Team Teleradiology Forum)

  1. நரம்பியல் அறுவைச் சிகிச்சைப் பேராசிரியர் ரூபவதனா மகேஷ்பரன் (நோர்வே), ஓய்வுநிலை நரம்பியல் அறுவைச் சிகிச்சைப் பேராசிரியர் கதிர் நடனச்சந்திரன் (அவுஸ்.) மற்றும் கதிரியக்கவியல் விசேட மருத்துவ நிபுணர் பொன். கேதீஸ்வரன்(அவுஸ்.) ஆகியோர் வியாழக்கிழமைகளிலும்
  2. தசை-வன்கூட்டு கதிரியக்கவியல் துறையில் விசேட பயிற்சிபெற்ற கதிரியக்கவியல் விசேட மருத்துவ நிபுணர் நிரூசினி சத்தியகுமார்(நியூசிலாந்து) மற்றும் கதிரியக்கவியல் விசேட மருத்துவ நிபுணர் பொன். கேதீஸ்வரன்(அவுஸ்.) ஆகியோர் திங்கட்கிழமைகளிலும்
  3. பேராசிரியர் குமரேசன் சந்திரசேகரன் (அமெரிக்கா), மற்றும் பேராசிரியர் சிவி எஸ். சிவா (அமெரிக்கா)  ஆகியோர் வெள்ளிக்கிழமைகளிலும்

யாழ். போதனா மருத்துவமனையால் 2019 இல் ஆரம்பிக்கப்பட்ட பூகோள தொலைமருத்துவக் கதிரியக்கவியல் கருத்தரங்குகளில் காணொலி வழியாகப் பங்குபற்றி யாழ். போதனா மருத்துவமனைக்கும் இப்பிராந்திய மக்களுக்கும் தொடர்ச்சியாக வழங்கிவரும் தன்னார்வ மருத்துவ சேவையானது விலைமதிப்பற்றது.

நரம்பியல் அறுவைச் சிகிச்சை கதிரியக்கவியல் பூகோள தொலைமருத்துவக் கருத்தரங்கு (Global MDT Neurosurgery Teleradiology  Forum):

இலங்கையின் வடபகுதியில் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணரையும் அறுவைச் சிகிச்சைக் கூடத்தையும் கொண்ட ஒரேயொரு அரச மருத்துவமனையாக யாழ். போதனா மருத்துவமனையே விளங்குகின்றது. யாழ். போதனா மருத்துவமனையில் கடமையாற்றுபவரும் இலங்கையின் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க முன்னணி நரம்பியல் அறுவைச் சிகிச்சை விசேட மருத்துவ வல்லுநர்களில் ஒருவருமான பொன்னம்பலம் ஆதித்தன் அவர்களது தலைமையிலான மருத்துவ நிபுணர் குழுவினர் தெரிவு செய்யும் சிக்கலான நரம்பியல் சத்திரசிகிச்சையுடன் தொடர்புடைய கதிரியக்கவியல் படங்களை பன்னாட்டு துறைசார் விசேட மருத்துவ நிபுணர்கள் வாராந்தம் வியாழக் கிழமைகளில் நடைபெறும் கருத்தரங்குகளில் ஆராய்ந்து தீர்மானங்களை மேற்கொள்கின்றனர்.

இலங்கைக்கும் நோர்வே நாட்டுக்குமிடையில் குளிர், கோடை காலங்களுக்கு ஏற்ப 3.30 அல்லது 4.30 மணி நேர வேறுபாடு காணப்படுகிறது. வாரந்தோறும் வியாழக் கிழமைகளில் ரூபவதனா பல்கலைக்கழகக் கடமைக்குப் புறப்படு முன்னர் காலை 6.30 மணிக்கு எம்மோடு காணொலி வழியாக இணைந்திருப்பார். எமது மருத்துவ நிபுணர்கள் தெரிவு செய்யும் நரம்பியல் சத்திரசிகிச்சையுடன் தொடர்புடைய சிக்கலான கதிரியக்கவியல் படங்களை ரூபவதனாவும்  ஏனைய மருத்துவ வல்லுநர்களும் ஆய்வு செய்து தீர்மானங்களை மேற்கொள்வார்கள்.

பேராசிரியர் ரூபவதனா மகேஷ்பரன்  அவர்களை நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் பொன்னம்பலம் ஆதித்தன் (Consultant Neurological Surgeon) பின்வருமாறு மதிப்பிடுகிறார்:

பேராசிரியர் ரூபவதனா யாழ். போதனா மருத்துவமனையால் ஒழுங்குபடுத்தப்பட்ட 81 இணையவழிக் கருத்தரங்கில் (2020.02.27 முதல் 2023.04.12வரை)  கலந்து கொண்டு மிகவும் ஆபத்து நிறைந்த நரம்பியல் சத்திர சிகிச்சைகளை மேற்கோள்ளும் போது பின்பற்ற வேண்டிய மாற்று வழிகளைப் பற்றியும் தனது அனுபவங்களையும் எம்மோடு பகிர்ந்து கொண்டமை இத்துறையில் எமக்குப் புதிய அறிவைத் தந்துள்ளது. கடந்த 3 வருடங்களில் பேராசிரியர் ரூபவதனாவும் ஏனைய பன்னாட்டு விசேட மருத்துவ நிபுணர்களும் நாம் தெரிவு செய்த மூளை-முள்ளந்தண்டு-நரம்பியல் தொடர்பான சிக்கலான சத்திர சிகிச்சைக்குரிய 500 நபர்களது கதிரியக்கவியல் படங்களை எம்முடன் இணைந்து பார்வையிட்டு சத்திர சிகிச்சைக்கு முன்னரும் சத்திர சிகிச்சை மேற்கொண்ட பின்னரும் நாம் முன்வைக்கும் வினாக்களுக்கு தரும் விளக்கங்கள் மிகவும் பெறுமதியானவை.

அண்மையில் ரூபவதனா அவர்கள் யாழ். போதனா மருத்துவமனைக்கு வருகை தந்து இங்குள்ள நரம்பியல் சத்திர சிகிச்சை அலகை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளதுடன் சத்திர சிகிச்சை உபகரணங்களையும் உதிரிப்பாகங்களை நன்கொடையாக  வழங்கியமையானது யாழ். போதனா மருத்துவமனையில் நரம்பியல் சத்திரசிகிச்சைகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்  பேருதவியாக அமைந்துள்ளது.

நரம்பியல் அறுவைச் சிகிச்சைப் பேராசிரியர் ரூபவதனா சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஆசிரியர் மகேஷ்பரன் அவர்களின் மகளாவார்.  (தொடரும்)

வடபகுதியில் தொலைமருத்துவ சேவை வழங்கும் விசேட மருத்துவ வல்லுர்கள்: பகுதி -1

வடபகுதியில் தொலைமருத்துவ சேவையை வழங்கும் பன்னாட்டு விசேட மருத்துவ வல்லுநர்கள்:

 பா. துவாரகன்,

அபிவிருத்தி உத்தியோகத்தர்  (பொறுப்பு)

மருத்துவ அருங்காட்சியகம் மற்றும் தொலைமருத்துவப் பிரிவு

போதனா மருத்துவமனை,

யாழ்ப்பாணம்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More