கரந்தெனிய இராணுவ ஆயுத புலனாய்வு படைப்படைப்பிரிவு முகாமில் புத்தாண்டு தினத்தன்று சேவையில் ஈடுபட்ட சிப்பாய்களுக்கு வழங்கப்பட்டிருந்த T56 ரக துப்பாக்கிகள் 36, காவற்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
கடந்த 14ஆம் திகதி மாலை அஹூங்கல்ல – மீத்தரமுல்ல பகுதியில் நபரொருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த மோப்ப நாய், குறித்த முகாமிற்குள் நுழைந்ததன் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை பெற்றுக் கொள்வதற்காக இந்த ஆயுதங்கள் காவற்துறையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அஹுங்கல்ல மித்தரமுல்ல பிரதேசத்தில் கடந்த 14ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு சிறுவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகி இருந்தனர். துப்பாக்கிச் சூட்டிற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கரந்தெனிய இராணுவ புலனாய்வுப் படை முகாமுக்கு அருகில் உள்ள புதரிலிருந்து பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு பயன்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ காவற்துறை மோப்ப நாய் இரண்டு தடவைகள் அருகிலுள்ள இராணுவ முகாமுக்குச் சென்றுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட அஹுங்கல்ல காவற்துறையினர், குறித்த இராணுவ முகாமில் இருந்து அன்றைய தினம் கடமைக்காக வழங்கப்பட்ட 36, T-56 துப்பாக்கிகளை கைப்பற்றப்பட்டுள்ளனர்.