Home இலங்கை நெடுந்தீவில் படுகொலை செய்யப்பட்ட ஐவரும் 75 வயதை கடந்த முதியவர்களே

நெடுந்தீவில் படுகொலை செய்யப்பட்ட ஐவரும் 75 வயதை கடந்த முதியவர்களே

by admin

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டு காயங்களுடன் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளார்.

100 வயதான கனகம் பூரணம் எனும் மூதாட்டி பலத்த வெட்டு காயங்களுடன் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லண்டன் பிரஜாவுரிமை பெற்ற வேலாயுதம்பிள்ளை நாகேந்திர ரத்தினம் (வயது 78) யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களான நாகநதி பாலசிங்கம் (வயது 82) , பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை (வயது 76) , கார்த்திகேசு நாகேஸ்வரி (வயது 83) , மகாதேவன் (வயது 75) என்பவர்களே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நெடுந்தீவு மாவளி இறங்கு  துறைக்கு அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் மூதாட்டியொருவர் நெடுந்தீவுக்கு செல்வோருக்கு தங்குமிட வசதிகளை வழங்குதல் ,உணவு வழங்குதல் போன்றவற்றை தொழிலாக செய்து வந்துள்ளார்.
இவரது கணவர் 1986ஆம் ஆண்டு குமுதினி படுகொலையின் போது படுகொலை செய்யப்பட்ட பின்னர் குறித்த மூதாட்டி தனது வாழ்வாதாரத்தை தானே கொண்டு நடாத்தி வந்துள்ளார்.
நெடுந்தீவில் உள்ள ஆலய மகா கும்பாபிஷேகத்திற்கு யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு மற்றும் புலம்பெயர் நாடொன்றில் இருந்து வந்திருந்த ஐவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நெடுந்தீவு சென்று இறங்குதுறைக்கு அருகில் உள்ள குறித்த மூதாட்டியின் வீட்டில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த வீட்டில் இருந்து இன்றைய தினம் சனிக்கிழமை காலை எவரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அயலவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது வெட்டு காயங்களுடன் சடலங்களாக காணப்பட்டுள்ளனர்.
ஒருவர் வீட்டின் வெளியேயும் ஏனையவர்கள் வீட்டின் உள்ளே படுக்கை மற்றும் ஏனைய பாகங்களிலும் கொடூரமான வெட்டு காயங்களுடன் சடலங்களாக காணப்பட்டனர்.
அதில் ஒருவர் படுகாயங்களுடன் காணப்பட்ட நிலையில் அவரை மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்தனர்.
சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு காவல்துறையினா்  விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் இருந்து  காவல்துறைக் குழு நெடுந்தீவு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
 
நால்வர் அடங்கிய கும்பலே படுகொலை செய்தது ?
நால்வர் கொண்டே கும்பலே படுகொலையை செய்துள்ளதாகவும் , வீட்டின் சற்று தூரத்தில் முன் பகுதியில் கடற்படை முகாம் அமைந்துள்ளமையால் , வீட்டின் பின் பகுதி  ஊடாகவே கும்பல் வீட்டினுள் புகுந்து இருக்கலாம் எனவும் , வாள்கள் மற்றும் கோடாரி போன்ற பயங்கர ஆயுதங்கள் தாக்கியே படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
அதேவேளை வீட்டில் இருந்த ஐவர் படுகொலையாகி உள்ளதாலும் , ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாலும் , வீட்டில் இருந்த பொருட்கள் எவையேனும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளனவா ? என்பதனை அறிய முடியவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
படகு சேவைகள் இடைநிறுத்தம். 
நெடுதீவில் இருந்து குற்றவாளிகள் தப்பி செல்லாதவாறு நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையிலான படகு சேவைகள் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது.
நீதவான் சம்பவ இடத்தில் விசாரணை. 
ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி கஜநிதிபாலன் நெடுந்தீவுக்கு நேரில் சென்று சம்பவ இடத்தினை நேரில் பார்த்து விசாரணைகளை முன்னெடுத்தார்.
அதேவேளை யாழ்ப்பாண தடயவியல்  காவல்துறைக்குழுவும், சட்ட வைத்திய அதிகாரியும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
 
நீதிபதியை வழிமறித்து போராட்டம். 
சம்பவம் இடம்பெற்ற வீட்டில் விசாரணைகளை முடித்துக்கொண்டு நெடுந்தீவு இறங்கு துறைக்கு வந்த நீதவானை வழிமறித்து மக்கள் போராட்டம் நடாத்தினார்கள்.
குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து அவர்களுக்கு உயர்ந்தபட்ச தண்டனையை வழங்க வேண்டும் எனவும் , நெடுந்தீவு மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் கோரி போராட்டம் செய்தனர்.
சடலங்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில். 
நீதவான் , சட்ட வைத்திய அதிகாரி சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் , உடற்கூற்று பரிசோதனைக்காக சடலங்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
டக்ளஸ் காவல்துறையினருக்கு பணிப்பு. 
வட மாகாணத்திற்கான பிரதிப் காவல்துறைமா அதிபருடன் தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நெடுந்தீவு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நடமாட்டங்கள் தொடர்பாகவும், இன்று நெடுந்தீவை விட்டு வெளியேறியவர்கள் தொடர்பாகவும் அவதானம் செலுத்துமாறு ஆலோசனை வழங்கியதுடன்,  இக்கொலைகள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட்டு, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான அச்சத்தினை விரைவில் களைய வேண்டிய அவசியத்தினையும் வலியுறுத்தியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More