புதுமை மாதா சிலை நிறுவும் நிகழ்வு என்ற தலைப்பில் யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையக் கட்டடத்துக்குப் பின்புறமாக புதுமை மாதா சொரூபம் ஒன்று திறந்து வைக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டு, சமூக ஊடகங்களில் உலாவும் துண்டுப் பிரசுரம் போலியானது என்று யாழ். ஆயர் இல்லம் குறிப்பிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய ஜஸ்ரின் ஞானப்பிரகாசத்தினால் புதுமை மாதா சொரூபம் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையக் கட்டடத்துக்குப் பின்புறமாகத் திறந்து வைக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் துண்டு பிரசுரம் ஒன்று பகிரப்பட்டு வந்துள்ளது.
அது தொடர்பில் யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் இல்லக் குரு முதல்வர் தெரிவிக்கையில், அந்தத் துண்டுப் பிரசுரம் போலியானதொன்று எனவும் அதில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் தெரிவித்தார்.
மேலும் மதங்களுக்கிடையிலான நல்லுறவைக் குழப்பும் வகையில் இத்தகைய நடவடிக்ககைளில் ஈடுபடும் தீய சக்திகள் குறித்து பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இந்தத் துண்டுப் பிரசுரத்தில் எழுத்துப் பிழைகளுடனும், மத முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலான வாசகங்களும் உள்ளடக்கி இருப்பதாக தெரிவித்தார்.