நாட்டில் இனவாத மற்றும் மதவாத நெருக்கடி நிலை உருவாகி வருவதை தீவின் பல்வேறு பகுதிகளில் இருந்து எழும் சம்பவங்கள் மூலம் தெரியவருவதால், இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு விசேட மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
ஷ்யாமோபாலி மகா நிகாயாவின் அஸ்கிரி பார்ஷவ மகா நாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரதன நாயக்க தேரரினால் இந்த விசேட மகஜர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டி மல்வத்து அஸ்கிரி மஹாநாயக்க தேரர்களை சனிக்கிழமை (20.05.23) சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். இதன்போதே அஸ்கிரி மஹாநாயக்க தேரர் இந்த விசேட செய்தியை கையளித்தார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள விகாரைகள் மற்றும் நாடெங்கிலும் உள்ள தனித்துவமான வரலாற்று சிறப்புமிக்க பௌத்த விகாரைகளை புனரமைப்பதில் உள்ள தடைகள் நீக்கப்பட்டு அந்த பணிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் மூன்று விடயங்கள் அடங்கிய குறிப்பாணையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தற்போது தீவின் பல்வேறு பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தொல்பொருள் இடங்கள் தொடர்பான திட்டங்கள் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படுவதுடன், வெளி தரப்பினர் வழங்கும் உதவிகளை அதற்காகப் பயன்படுத்த வேண்டும்.
மேற்படி விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தி அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அந்த குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.